கண்ணீருடன் ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர்: பங்களாதேஷ் அணிக்கு பின்னடைவு
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இந்த முடிவை நேற்றையதினம் (06.07.2023) அறிவித்துள்ளார்.
ஆடவருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் அக்டோபர் முதல் தொடங்க உள்ள நிலையில், தமிம் இக்பாலின் இந்த ஓய்வு முடிவு அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.
கண்ணீருடன் தெரிவிக்கப்பட்ட ஓய்வு முடிவு
இந்த போட்டிகளில் அணி தலைவராக செயற்பட்டு வந்த தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக தனது ஓய்வு முடிவை கண்ணிருடன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
நான் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். நான் சிறப்பாக விளையாட முயற்சித்திருக்கிறேன். இந்த தருணத்தில் நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய இந்த பயணத்தில் இணைந்து பயணித்த அனைவருக்கும் நன்றி. அவர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்தார்கள்.
அடுத்த அணி தலைவர் குறித்து ஆலோசனை
எனது ரசிகர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அன்பு மற்றும் நம்பிக்கை என்னை சிறப்பாக விளையாடச் செய்தது.
வாழ்க்கையில் எனது அடுத்த அத்தியாயத்துக்காக நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். உங்களது வேண்டுதலில் நானும் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பங்களாதேஷ் ஒரு நாள் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளதால், அடுத்து அணியை ஒரு நாள் போட்டிகளில் யார் வழிநடத்துவது என்பதை பங்களாதேஷ் கிரிக்கெட் திணைக்களம் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |