தமிழர்கள் ஒன்று திரண்டு வடக்கினை நோக்கி செல்லும் போது எவராலும் அதனை தடுக்க முடியாது! - எம்.கே.சுமந்திரன்
“அரசாங்கமே முன்னின்று தொழிற்சங்கங்களை ஏவி விட்டு போராட்டம் நடத்தி கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுப்பதை தடுக்கின்ற செயலை செய்யும் போது கோவிட் - 19 வைரஸ் பற்றி எவரும் கவலைப்படவில்லை, எந்த பொலிஸாரும் எந்த நீதிமன்றத்தினையும் நாடவில்லை” என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டு தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு எதிராகப் பலருக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ள போதிலும் எனக்கு எதிராக எந்த தடையுத்தரவும் வழங்கப்படவில்லை.
தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது நீதிமன்ற தடையுத்தரவுகள் 50 பேருக்கு மேல் எடுக்க முடியும்.
ஆகக்கூடிப்போனால் 100 பேருக்கு எடுக்க முடியும். அதற்கு மேல் தடையுத்தரவு எடுக்க முடியாது.
ஆகையினால் ஆயிரம் ஆயிரமாகத் திரண்டு வாருங்கள். அவ்வாறு திரண்டு செல்வோமானால் எந்த பொலிஸாரினாலும் எந்த நீதிமன்றத்திலும் தடையுத்தரவு பெற முடியாது.
இது எங்கள் ஜனநாயக உரிமை. இந்த ஜனநாயக உரிமையினை தடுப்பதற்கு எந்த சட்டத்திலும் இடமில்லை.
கோவிட் - 19 வைரஸை காரணம் காட்டி சில தடையுத்தரவுகள் பெறப்படுகின்றன. சமூகங்களிடையே குரோதம் ஏற்படும் என்று பொய்யாக சொல்லி சிலர் உத்தரவுகளை பெற எத்தனிக்கின்றார்கள்.
இன்றைக்கு கோவிட் - 19 வைரஸினால் மோசமாகப் பாதிக்கப்பட்டது மேல் மாகாணம். அவ்வாறு இருக்கும் போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை தொடர்பான பிரச்சினையில் ஆர்ப்பாட்டம் பல நாட்களாக நடைபெற்று வருகின்றது. அங்கு கோவிட் - 19 தொடர்பில் எவரும் கவலைப்படவில்லை.
அரசாங்கமே முன்னின்று தொழிற்சங்கங்களை ஏவி விட்டு கிழக்கு முனையை இந்தியாவுக்குக் கொடுப்பதை தடுக்கின்ற செயலை செய்யும் போது கோவிட் - 19 வைரஸ் பற்றி எவரும் கவலைப்படவில்லை, எந்த பொலிஸாரும் எந்த நீதிமன்றத்தினையும் நாடவில்லை.
ஆனால் எங்களது அடிப்படை உரிமைகளை நாங்கள் பெறவேண்டும் என்பதற்காக ஜனநாயக ரீதியாக, அகிம்சை வழியிலே எவருக்கும் பாதகமில்லாமல் வீதியில் நடக்கின்ற போது அதற்கு எதிரான தடையினை அரச இயந்திரம் நீதிமன்றம் ஊடாக பெறுகின்றது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இன்று யாழ். நீதிமன்றங்கள் ஊடாகவும் தடையுத்தரவினை பெறப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. நாங்கள் நீதிமன்ற உத்தரவினை மதிப்போம் மீறமாட்டோம்.
நாங்கள் தமிழ் பேசும் மக்களாக ஒன்றாகத் திரண்டு பெரும் திரட்சியாக வடக்கினை நோக்கிச் செல்லும் போது எவராலும் அதனைத் தடுக்கமுடியாது.
விசேடமாக சர்வதேசம் எங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டிய, திரும்பிப் பார்க்க வைக்கவேண்டிய ஒரு பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கையினை வலியுறுத்தி தொடர்ந்து இந்த போராட்டத்தினை முன்னெடுப்போம்” என தெரிவித்துள்ளார்.