உட்கட்சி விவகாரத்திற்கு நீதிமன்றத்தை நாடும் அரசியல்வாதிகள்! கடுமையாக சாடிய டக்ளஸ்
இலங்கை நீதிமன்றங்களில் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பவர்கள் தமக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது வேடிக்கையானது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதி விசாரணை
சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், ''எல்லா பிரச்சினைக்கும் சர்வதேச நீதி விசாரணையே தேவை என்றவர்கள்,தமது உட்கட்சி விவகாரத்திற்கு தீர்வு கோரி இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
முன்னதாக இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றும், இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை எனவும் கூறினார்கள்.
அரசியல் நாடகம்
இதேவேளை முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டுப்போனதை வைத்து இலங்கையில் நீதி செத்து விட்டதென்று மனிதச்சங்கிலிப் போராட்டமும் நடத்தினார்கள்.
இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினை என்றால் அது தீர்ந்துவிடக்கூடாதென்று சர்வதேச நீதிமன்றத்திற்கு போவோம் என கூறுபவர்கள் தமது பிரச்சினை என்றவுடன் அதை இலகுவாக தீர்க்கும் விருப்பத்தோடும், நம்பிக்கையோடும் இலங்கை நீதி மன்றத்தை நாடியுள்ளனர்.
இதிலிருந்து இவர்களது அரசியல் நாடக வேடம் முற்றாக கலைந்து விட்டது" என்று கூறியுள்ளார்.