யுத்தத்தில் இறந்த சிங்கள இராணுவ வீரனின் தாய் ஒருவருக்கு இழப்பீட்டு நிதியை உங்களால் வழங்க முடியுமா? காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்
ஒரு லட்சம் ரூபாவை யுத்தத்தில் இறந்த சிங்கள இராணுவ வீரனின் தாய் ஒருவருக்கு வாழ்வாதாரமாகவும் அல்லது இழப்பீட்டு நிதியாக உங்களால் வழங்க முடியுமா? என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பில் நேற்று ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவினர்களை மீட்டுத் தருமாறு சுமார் பத்து வருடங்களாக வீதி வீதியாகப் போராட்டம் நடத்தி வருகிறோம்.
தற்போது நாட்டின் நிதி அமைச்சர் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கி ஒரு லட்சம் ரூபா வாழ்வாதார உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
எமது உறவுகள் காணாமல் போவதற்கு காரணமாக இருந்த அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டபாய ராஜபக்ச பிரதான காரணமாக விளங்குகிறார்.
இறுதி யுத்தம் முடிவடைந்து உறவுகளுக்கான நீதி உள்நாட்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம் ஆனால் அந்த நம்பிக்கை வீண் போனதில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது.
நீதி இல்லாத நாட்டில் நீதியை எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துவதன் மூலம் நமது உறவுகளுக்கான நீதியை பெறமுடியும் என்பதே எமது நம்பிக்கை.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைத்து வாழ்வாதாரம் தருவதாக காணாமல்போன உறவுகளை தேடி அலையும் தாய்மார்களின் மனநிலையை குழப்புவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒரு லட்சம் ரூபா தருவதாக அறிவித்து தாய்மார்களின் மனநிலையை மாற்றி விடலாம் என முயற்சிக்கிறார்கள்.
எமது உறவுகளுக்கான நீதியாக நிதியை பெற வேண்டும் என நினைத்திருந்தால் அதை நாம் எப்போதே பெற்றிருப்போம்.
இலங்கை அரசாங்கம் தமிழ்மகன் ஒருவரின் உயிரின் விலை ஒரு லட்சம் என கணிப்பிட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு நாம் ஒன்றை சொல்ல விரும்புகிறோம்.
ஒரு லட்சம் ரூபாவை யுத்தத்தில் இறந்த சிங்கள இராணுவ வீரனின் தாய் ஒருவருக்கு வாழ்வாதாரமாகவும் அல்லது இழப்பீட்டு நிதியாக உங்களால் வழங்க முடியுமா? எமது பிள்ளைகளை நாம் பத்து மாதம் சுமந்து பெற்றது போல சிங்கள தாயும் அவ்வாறே பெற்றாள்.
எமது நாட்டில் மன்னிப்பு என்பது தெரியாத விடயம் அதனால் தான் சரணடைந்தவர்களை இன்றுவரை காணாமல் வைத்திருக்கிறார்கள். எமது போராட்டங்களை திசை திருப்புவதற்காக பல திசைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தில் போராடிவரும் தாய்மார் குறித்த விடயம் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஆகவே எமது பிள்ளைகளை வைத்து ஏலம் போடாதீர்கள் உங்களிடம் நாம் நீதியையும்
கேட்கவில்லை, நிதியையும் கேட்கவில்லை எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என அவர்கள்
மேலும் தெரிவித்துள்ளனர்.



