தமிழ்த்தேசியம் பேசி திரியும் தலைவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவில்லை! ச.சுகிர்தன் (Photos)
தமிழ் தேசியக் கட்சிகளோ, தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு திரியும் கட்சித் தலைவர்களோ, கட்சி அங்கத்தவர்களோ பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான கையெழுத்து போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது எமக்கு மிக பெரிய மனத்தாக்கத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பொதுச்சந்தைக்கு முன்பாக இடம்பெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கைக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் இந்த போராட்டத்தில் பங்கேற்று கையெழுத்திட்டிருந்தார்.
பொதுமக்களுக்கு உள்ள அக்கறை இவர்களுக்கு இல்லை. இது நாட்டுக்கு தேவையான ஒன்று. இந்த போராட்டத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் ஈடுபட வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து, கட்சிகளை கடந்து கையெழுத்திட வேண்டிய தேவை இருக்கின்றது.
கடந்த நல்லாட்சியில் இந்த விடயத்தை செய்யவில்லை என்று கேட்கலாம். ஆனால் நல்லாட்சியில் செய்யப்பட்ட முயற்சிகளை அவர்கள் மறந்திருக்கலாம். நல்லாட்சியில் இந்த முயற்சி எடுக்கவில்லை என்றால் இனியும் இந்த முயற்சி எடுக்ககூடாது என்று இருக்கின்றதா?
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் இருந்தால் எங்களது மக்கள் மீது அக்கறை உள்ளவர்களாக இருந்தால் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.
சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள், முஸ்லிம் தலைவர்கள் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை தமிழ்த் தலைவர்களும் கொடுக்க வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.




