சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறு புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை
கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலைசெய்யக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப் போராட்டம் இன்றைய தினம் (11) கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்ற எமது விடுதலைக்காக போராடிய தமிழ் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டும் என்கின்ற அறவழிப்போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் என்னும் பெயரில் மிக மோசமான மனிதகுலத்திற்கு எதிரான சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்மூலம் அப்பாவிகளை கூட பயங்கரவாதிகள் என்ற பார்வைக்குட்படுத்தப்படும் மிக மோசமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது ஆட்சிக்குவந்த அரசாங்கம் இந்த சட்டத்தினை நீக்குவோம் என்னும் உத்தரவாதத்தினையளித்தும் கூட இன்னும் அந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை.
புதிய அரசாங்கம்
இந்த நிலையில் இந்த கொடிய பயங்கரவாத சட்டத்தின் கீழ் எமது பத்து தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.இவர்கள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும்.
இவர்கள் நீண்டகாலமாக சிறைச்சாலையில் கழித்துவிட்டார்கள்.இருக்கும் காலத்திலாவது தமது உறவுகளுடன் இணைந்து வாழ்வதற்கு மாற்றத்தினை உருவாக்கப்போவதாக கூறும் புதிய அரசாங்கம் அதனை செய்யவேண்டும் என்றார்.
வவுனியா மாவட்ட இணைப்பாளர் இ.செல்வநாதன் தலைமையிலான இந்த கையெழுத்துப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மாவட்ட அமைப்பாளர் குககுமார், சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |