தமிழ் அரசியல் கைதிகளை புறக்கணிக்கும் அநுர அரசாங்கம்!
தமிழ் அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விட அதிக காலம் சிறையில் வாடுகின்றனர். விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்த தற்போதைய ஜனாதிபதியும் அதனை நிறைவேற்றவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (16.10.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சிறை தண்டனைக்கு உள்ளாகும் பிக்குகளின் காவி உடை விடயமாக ஞானசார தேரர் கைதினைத் தொடர்ந்து எழுந்துள்ள சிக்கலைத் தீர்க்க நியமிக்கப்பட்ட விசேட ஆலோசனைக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கைதிகளின் சீருடை தொடர்பான மாற்றத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்தர்களின் ஆதரவினை தக்க வைக்கலாமே தவிர பௌத்த தர்மத்தையோ அது கூறும் நீதியையோ பாதுகாக்க முடியாது என்பதுவே உண்மை.
காவி உடை விடயம்
நாட்டின் அதிகார அரசியல் தலைமைகளும், கட்சி சார் அரசியல் தலைமைகளும் பௌத்த மகா சங்கத்தினரை சந்தித்து அவர்களின் ஆசியை பெற்றுக் கொள்வதும், பௌத்த விகாரைகளுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடுவதும் உண்மையான பக்தியின் தூண்டுதலால் ஏற்படுவதல்ல என்பதை எவரும் அறிவர்.
இதுவே சுதந்திர இலங்கையின் வரலாற்று உண்மையுமாகும். அதுவே நாட்டின் சீரழிவுக்கும் காரணம் எனலாம்.காவி உடை விடயத்திலும் அதுவே உண்மை.

ஞானசார தேரர் காவி உடையோடு நாட்டின் சட்டத்தினை மதிக்காது, சமய மொழி பேசாது, இனங்களுக்கு இடையில் மோதலை தூண்டும் வக்கிர வார்த்தைகளைக் கக்கி சிங்கள பௌத்தர்களை வன்முறைக்கு தள்ளியதை நாடே அறியும்.
அத்தோடு நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தினால் தண்டனை பெற்ற போதும், அந்தத் தண்டனை சட்டத்துக்கு புறம்பாக நீக்கப்பட்டு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை கொடுக்கப்பட்டப் போதும், சட்டத்திற்கு பயந்து அவர் ஓடி ஒழிந்திருந்த போதும் அமைதி காத்த மகா சங்கத்தினரும், சிங்கள பௌத்தர்களும் சிறைச்சாலை சட்ட விதிகளுக்கு ஏற்ப ஞானசார தேரர் சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததை காரணம் காட்டி கொதித்தெழுந்துபாதயாத்திரை நடத்துவதும் எந்த பௌத்த கருமத்தின் அடிப்படையில் என்பதுவே மனசாட்சி உள்ள மக்களின் கேள்வியாகும்.
அரசியல் கைதிகளின் விடுதலை
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்து மத குருக்கள், கிறிஸ்தவ மத தந்தையர்கள், இஸ்லாம் மத தலைவர்கள் என்போர் கைது செய்யப்பட்டு விசாரணையின் போதும், சிறைச்சாலைக்குள்ளும் வன்கொடுமைகளை அனுபவித்த போதும் இவர்கள் நீதிமன்றத்தினால் குற்றமற்றவர்கள் என விடுவித்தப் போதும் பெரும்பாலான பௌத்த மதத்தினரும் துறவிகளும் அமைதி காத்தனர்.

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்வதாக கூறி விடுவிக்காதது மட்டுமல்ல இன்று வரை விடுவிக்கப்படாமலேயே சிறையில் வாடுகின்றார். பௌத்த தர்மம் சார்ந்தோர் குரல் கொடுக்காதும் உள்ளனர்.
தண்டனை காலத்தை விட அதிகமான காலம் தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்குள் வாடுகின்றனர்.இவர்களை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்த தற்போதைய ஜனாதிபதியும் அதனை நிறைவேற்றாதிருப்பதும் இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதற்காகவே.
ஆனால் தண்டனை கைது பிக்குகளின் காவி உடை விடயமாக ஜனாதிபதி மகா சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடி அவசர அவசரமாக அது தொடர்பில் ஆலோசனை வழங்க குழு அமைத்ததும் சிங்கள பௌத்தர்களின் சார்பு அரசியலை முன்னெடுப்பதற்குமாகும். இதுவே பயங்கரவாதம் எனக் குறிப்பிட்டுள்ளார்.