மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் நழுவ விடக்கூடாது : சிவசக்தி ஆனந்தன்
தமிழின விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்கள் எமக்கு ஏற்பட்டுள்ள போதும் அவை நழுவவிட்டமை தான் கடந்தக்கால வரலாறாக உள்ள நிலையில் தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ள நிலையில் அதனை நழுவ விட்டுவிடக்கூடாது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இன்று (02) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
இலங்கை அரசாங்கமானது தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. அதேநேரம், ஆட்சியாளர்களின் பங்காளிகளுடனும் அரசியல் ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. சிங்கள, பௌத்த கோட்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 69இலட்சம் தென்னிலங்கை மக்களே ஆட்சியாளர்களை திட்டித்தீர்க்கின்ற அளவிற்கு வெறுப்பை காறி உமிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆட்சியாளர்கள் இந்தியா, சீனா, அமெரிக்கா என்று தமக்காக திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ள அனைத்துக் கதவுகளையும் தட்ட ஆரம்பித்துள்ளார்கள்.
ஆனால் இலங்கையை மையப்படுத்தி ஏற்பட்டிருக்கும் பூகோளப்போட்டியின் பங்குதாரர்களான இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியன தன்னலன்களை மையப்படுத்தி காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன.
இதில் அமெரிக்கா, இந்தியாவை முன்னிலைப்படுத்திய நகர்வினை இலங்கை விடயத்தில் கையாள்கின்றது. அதேபோன்றே ஏனைய மேற்குலக நாடுகளும் அவ்விதமான நகர்வினையே பின்பற்றுகின்றது.
இந்நிலையில் இந்தியாவிடமிருந்து இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான கடன்களை பெறுவதற்கு தயாராகியுள்ளது. மறுபக்கத்தில் சீனாவிடத்திலும் கடன்களை, நன்கொடைகளை பெறுவதற்கு தயாராகி வருகின்றது.
இந்தப் பின்னணியில், எதிர்வரும் எட்டாம், ஒன்பதாம் திகதிகளில் சீன வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் வாங் யி இலங்கைக்கு வருகின்றார். அவர் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 65ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதையே பிரதான விடயமாக கொண்டிருக்கின்றார்.
அதேநேரம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஒன்பதாம் திகதி இந்தியாவுக்குச் செல்வதற்கு தயாராகி வருகின்றார். குஜராத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பது காரணமாக கூறப்பட்டாலும், பிரதமர் மோடியைச் சந்திப்பது, இந்தியாவிடமிருந்து பெறக்கூடிய டொலர்களை விரைவுபடுத்துவது என்பன அந்தப் பயணத்தின் பின்னணிகளாக உள்ளன.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளும், ஏனைய முஸ்லிம், மலையக கட்சிகளும் இணைந்து தமிழ் பேசும் கட்சிகளாக பிரதமர் மோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தினை விரைவு படுத்த வேண்டியுள்ளது.
குறித்த ஆவணத்தினை அனுப்புவதன் ஊடாக, இந்தியா இலங்கை மீதான தனது பிடியை உறுதிப்படுத்தும் அதேநேரம், அதன் பயனாக ஆகக்குறைந்தது இந்திய இலங்கை ஒப்பந்தத்தினையாவது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும். அதிகாரப் பகிர்வுக்கான முதற்படியாக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை பாதுகாப்பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் இயலுமானதாக இருக்கும்.
ஆட்சியில் உள்ள தரப்பினர் புதிய அரசியலமைப்பினை முன்னகர்த்துவதற்குரிய நடவடிக்கைளை கையிலெடுத்துள்ள நிலையில் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அகற்றப்படும் அபாயமுள்ளது. ஆகவே தமிழர்களின் அபிலாஷைகளை 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றாலும் கூட முதலில் இருப்பதைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.
ஆகவே 34ஆண்டுகளுக்கு முன்னதாக 1987இல் தமிழ்த் தலைவர்கள் விட்ட தவறினால் ஏற்பட்ட விளைவுகள் (உயிரிழப்பு,சொத்தழிவு) அந்தநிலை மீண்டும் இழைத்துவிடக் கூடாது. தமிழின விடுதலைப்போராட்டத்தில் சமர்களமாடிய தரப்புக்களே முதலில் 13ஐ பாதுகாப்போம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் அறவழியில் வந்த தலைமைகள் அதனை புறமொதுக்காது சிந்தித்துப் பார்க்க வேண்டியது கட்டாயமாகின்றது.
தற்போது ஏற்பட்டுள்ள பூகோள, பிராந்திய அரசியல், இராஜதந்திர மூலோபாயச் சூழலை
உணர்ந்து கொள்ளாது வாய்ப்பினை நழுவ விட்டால் தமிழினத்தின் எதிர்காலம் மேலும்
மோசடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன.
எனவே குறிப்பறிந்து, தீர்க்கமான தீர்மானத்தினை எடுக்கும் அதேநேரம், தொடர்
தாமதங்களை தவிர்த்து மிகமிக விரைவாக கூட்டு ஆவணத்தினை ஏகோபித்து பிரதமர்
மோடிக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
