அரசாங்கம் நாடுகளுக்கு காணி வழங்குவதில்லை முதலீட்டாளர்களுக்கே வழங்கும்: வடக்கு ஆளுநர் தெரிவிப்பு
அரசாங்கம் நாடுகளுக்கு காணி வழங்குவதில்லை சரியான முதலீட்டாளர்களை அடையாளங்கண்டு அவர்களின் திட்டங்களுக்கே தேவையான காணியை வழங்குவதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் செயலகம், யாழ். மாவட்ட செயலகம் 51 ஆவது காலால் படை ஆகியன இணைந்து யாழ். துரைப்பா விளையாட்டு அரங்கில் இன்று (15.04.2023) ஏற்பாடு செய்திருந்த புது வருட விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிலையில் ஊடகவியளாளர் எழுபிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிதரன் ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்
ஊடகவியலாளர் ஆளுநரிடம் கேள்வி எழுப்பும் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வடக்கில் சீனாவுக்கு 700 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளதாக கருத்து தெரிவித்திருக்கிறார் அது பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதன் போது பதில் அளித்த ஆளுநர், சிறிதரன் கருத்தை நான் அறியாத நிலையில் அவருடைய கருத்துத் தொடர்பில் பதில் கூற முடியாது.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் நாட்டை பொருளாதார நிதியில் முன்னேற்றுவதற்கான தேவைப்பாடுகள் இருக்கும் நிலையில் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் நிலையில் அவர்களின் சரியான திட்டங்களுக்கு அரசாங்கம் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறது.
அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கே காணிகளை வழங்கும்
வடக்கில் முதலீடு செய்வதற்காக தற்போதைய சூழ்நிலையில் யாரும் விண்ணப்பித்துள்ளார்களா என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது.
அவ்வாறு விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு தேவையான காணிகளை அடையாளங்கண்டு கொடுப்பதற்கு மாவட்ட செயலகம் மற்றும் மாகாண காணித் திணைக்களம் அதற்கான பணிகளைச் செய்வார்கள்.
ஆகவே அரசாங்கம் காணி வழங்குவதாயின் நாடுகளுக்கு காணிகளை வழங்குவதில்லை நாட்டை
அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கே காணிகளை வழங்குவதாக‘‘ஆளுநர் தெரிவித்தார்.



