தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அபிலாசைகளை வென்றெடுப்பதே முக்கியம்: சி.வி விக்னேஸ்வரன்
அமைச்சு பதவி சிலருக்கு பெரிதான விடயமாக இருக்கின்ற நிலையில் எனக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அபிலாசைகளை வென்றெடுப்பதே முக்கியம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.நல்லூரில் நேற்று(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,''நான் அமைச்சர் பதவியை ஏற்க போகிறேன் என்ற கருத்து எனது கட்சியை சார்ந்த ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.அவரது கருத்தை நான் பெரிதாக எடுக்கவில்லை ஏனெனில் சிலவேளை ஊடகங்களுக்கு முன்னால் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம்.
தமிழ் மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கத்திடம் இருந்து உதவி: க.வி.விக்னேஸ்வரன் |
தீர்மானங்கள்
எனது கட்சி பிரதிநிதிகள் மற்றும் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கு எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் தொடர்பில் இணைய வழியிலே தகவல்களை தெரிவிப்பது வழமை. தற்போதைய அரசியல் சூழல் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நான் ஏற்கனவே சகலருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.
நான் முதலமைச்சராக பதவி வகித்தபோது வாங்கிய சம்பளத்தை விடவும் அரை மடங்கு அதிகமான சம்பளத்தை அமைச்சர்கள் பெற்றார்கள். நான் அப்போது விரும்பியிருந்தால் அமைச்சராக பதவி வகித்து சலுகைகளை அனுபவித்திருக்கலாம். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை.
எனது கட்சியில் அங்கத்தவர்களுடனும் அல்லது அங்கத்துவ கட்சி தலைவர்களுடனும் பேசும்போது வெளிப்படையாகவே செயல்படுகிறேன். சிலர் என் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள்.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அவர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க காத்திரமான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதே எனது நிலைப்பாடாகும்.
ஆகவே யாரும் கருத்துக்களை வெளியிடலாம் அதை பற்றி நான் கவலைப்பட போவதில்லை. ஏனெனில் அமைச்சு பதவிகளை விட உயர் பதவியான உயர் நீதிமன்ற நீதிபதியாக நான் பதவி
வகித்தவன்'' என தெரிவித்துள்ளார்.