டக்லஸின் கொள்கை வழியில் பயணிக்கும் தமிழ் கட்சிகள்
எமது கட்சியினுடைய கொள்கைகளை ஏற்று தமிழ் கட்சிகள் செயற்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று(24.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
புதிய இந்திய தூதுவரை சந்தித்த அனைத்து தமிழ் கட்சிகளும், 13 வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்வில் இந்தியா தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
அரசியல் தீர்வு
இதன்படி இந்த செயற்பாடானது தமது நீண்டகால கோரிக்கையாகும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வந்திருக்கின்ற அரசியல் தீர்வை அல்லது அரசியல் வழிகாட்டலை இன்று தமிழ் கட்சிகள் ஏற்று அல்லது பின்பற்றி வருகின்றமை எமக்கு பெருமையளிக்கிறது.
இந்நிலையில், தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வை நோக்கி அவர்கள் வலுச் சேர்க்க வேண்டும்.
எங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் அல்லது எங்களுடைய கருத்துக்களுடன் இணக்கப்பாட்டிற்கு வந்ததையிட்டு நாங்கள் பெருமை அடைகிறோம்.
அரசியல் சுயலாபம்
மேலும், தமிழ் மக்களுடைய, மலையக மக்களுடைய வாக்குரிமையை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியோ அல்லது ஜீ.ஜீ பொன்னம்பலமோ எந்த விதத்திலும் பறிக்கவில்லை அல்லது அவர்களுக்கு எதிராக நடக்கவில்லை என்கின்ற பொய்யான செய்தியை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் நாடாளுமன்றில் வெளியிட்டுள்ளார்.
இந்த நாட்டினுடைய முதுகெலும்பாக இந்த நாட்டினுடைய வருவாய் ஈட்டி கொடுக்கின்ற மலையக மக்களுடைய வாக்குரிமையையும், பிரஜா உரிமையையும் இல்லாது செய்வது தொடர்பில் தங்களுடைய சுய அரசியல் இலாபத்திற்காகவும் அமைச்சு பதவியை பெறுவதற்காகவும் ஜீ. ஜீ பொன்னம்பலம் எவ்வாறு நடந்து கொண்டார் என்கின்ற ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றது என்பதனையும் தெரியப்படுகின்றோம்.
தேவைப்படுகின்ற போது ஆதாரத்துடன் மக்கள் மத்தியில் அதனை வெளியிடுவதற்கு தயாராக இருக்கின்றோம்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |