ரணிலின் வரவு செலவு திட்டம் மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது: இரா.சாணக்கியன் தெரிவிப்பு (Video)
“நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது“ என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திராய்மடு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மின்னொளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் நடைபெற்ற
கூட்டம் சமஸ்டியை தீர்வாக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளின் தலைவர்களுக்கான
கூட்டமாகவே நடைபெற்றது.
அழைப்பு விடுக்கப்படவில்லை
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நான் இன்னும் கட்சி தலைவராக வரவில்லை. அந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் சமபந்தன் ஆகியோர் மட்டுமே அந்த கூட்டத்தில் சமுகமளித்திருந்தனர். பலர் அந்த சந்திப்புக்கு வருவதாக கூறியிருந்தாலும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
அவர்கள் சமஸ்டி முறையினை ஏற்றுக்கொள்ளாத கட்சிகளா என்பது எனக்கு தெரியாது. அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் என்றால் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரின் கருத்தினை மதித்து அவர்கள் வந்திருக்க வேண்டும்.
அண்மையில் ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிக மோசமான முறையில்
தமிழ்தேசிய கூட்டமைப்பினை விமர்சித்திருந்தார். இவை மிகவும் கவலையான
விடயங்கள். இவர்கள் சுயநல அரசியலை விடுத்து தமிழ் சமூகத்திற்காக அரசியல் செய்ய
பழக வேண்டும்.
வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவா? எதிர்ப்பா?
வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவா எதிர்ப்பா என்பது தொடர்பில் எங்களது நாடாளுமன்ற குழுக்கூடி தீர்மானத்தினை எடுக்கும். இந்த வரவு செலவு திட்டம் மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது.
அரசாங்கமானது விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவினை குறைத்துள்ளனர். விசேட தேவையுடையவர்களிடம் வழிப்பறி செய்யும் அரசாங்கமாகவே நாங்கள் இந்த அரசாங்கத்தினை பார்க்கமுடிகின்றது.
ஒரு பக்கம் விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவினை குறைக்கும் அதேநேரம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்களுக்கு அதிகளவு சலுகையினை கொடுத்து அவர்களை ஒரு பக்கத்தில் பணக்காரர்களா மாற்றும்போது இந்த விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவினை குறைத்தது மிகவும் கவலையான விடயம்.
இந்த அரசாங்கம் பொருளாதார நெருக்கடியான இக்காலப்பகுதியில் இவ்வாறானவர்களை இன்னும் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். அதனைவிடுத்து அவர்களிடம் வழிப்பறி செய்வது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்” எனவும் தெரிவித்துள்ளார்