ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர்: ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (Photos)
புதிய இணைப்பு
ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது எனவும், அதற்கு ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவைக் கோருவது எனவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (டி.ரி.என்.ஏ.) தீர்மானித்துள்ளது.
குறித்த தகவலை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று (05.11.2023) மன்னாரில் நடைபெற்றபோதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொது வேட்பாளர் விடயத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவைக் கோருவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
மன்னாரில் ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதி உயர் நிறைவேற்றுக் குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குழு கூட்டம் இன்று (5.11.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் கட்சி சார்ந்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதோடு, பல்வேறு விடயங்களுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கட்சி சார்ந்த விடயங்கள்

ரெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் ரெலோ கட்சி சார்பாக கட்சியின் செயலாளரும்,கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), கட்சியின் ஊடக பேச்சாளர் குருசாமி சுரேன், ஈபி.ஆர்.எல்.எப் கட்சி சார்பாக கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
மற்றும் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கட்சியின் உப தலைவர் இரா.துரைரட்னம், புளொட் கட்சி சார்பாக கட்சியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், கட்சியின் செயலாளர் ஆர்.ராகவன், தமிழ் தேசிய கட்சியின் சார்பாக கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக கட்சியின் தலைவர் சிவநாதன் வேந்தன், கட்சியின் பேச்சாளர் கணேசலிங்கம் துளசி, கட்சியின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் நாகலிங்கம் நகுலேஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

