வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்: டக்ளஸ்
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் போது, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் சிங்கள மொழி பயன்படுத்தப்படுவது சிக்கலுக்குரியது.
இந்த சிக்கல் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படுவது குறித்து நான் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளேன்.
இதனடிப்படையில் எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களிள் போது தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இதற்கு முன்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தை திறந்த போது, அதன் பெயர் பலகையில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமை சம்பந்தமாக தெற்கில் உள்ள இனவாத குழுக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
அத்துடன் அமைச்சர் விமல் வீரவங்சவும் விமான நிலையத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமை சம்பந்தமான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். வீரவங்ச அந்த பெயர் பலகையை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தார்.