படுகொலை செய்யப்பட்ட ஊடகர்களுக்கு நீதி கிட்டுமா..!
ஜனநாயகத்தின் நான்காவது தூண்களில் ஊடகம் காணப்படுகிறது என்றிருந்த போதிலும், ஊடகவியலாளர்களின் பணி போற்றத்தக்கதுமாக இருந்தாலும் கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் வடகிழக்கு உட்பட நாட்டின் பல இடங்களிலும் படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் உண்டு.
சுமார் 44 ஊடகவியலாளர்கள் இற்றை வரைக்கும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2010க்கு இடையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், கடந்த ஆட்சியாளர்கள் தொடக்கம் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகர்ளுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது.
காலா காலமாக இவர்களுக்காக நினைவஞ்சலி நாள் அவ்வப்போது ஊடக துறைசார்ந்த ஊடக அமைப்புக்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களால் நினைவு கூறப்பட்டாலும் படுகொலைக்கான நீதிப்பொறி முறை ஊடான விசாரணை இன்றி காலத்தை கடத்துகின்றனர். தற்போது புதிய அரசாங்கத்திலும் ஊடக அடக்குமுறைகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஊடகர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டு பல மணி நேரங்கள் விசாரணை செய்து பெரும் அச்சுறுத்தளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையும் காணப்படுகிறது. அண்மையில் முல்லைத் தீவைச் சேர்ந்த இளம் புகைப்பட ஊடகவியலாளர் குமணண் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டிருந்தார்.
நிமலராஜனின் வழக்கு
ஊடக சுதந்திரம் நாட்டில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருவதனை இது போன்ற சம்பவங்களால் காணக்கூடியதாக உள்ளது. வடக்கில் யுத்த காலத்தின் போது பல போர் செய்திகளையும் அரசியல் செய்திகளுடனான ஊடக பணியில் இருந்த சிரேஷ்ட ஊடகர் ம.நிமலராஜன் 2000.10.19ஆம் திகதி இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட போதும் அவருக்கான நீதி கிடைக்கவில்லை.
இதன் ஒரு கட்டமாக நிமலராஜனின் வழக்கு தொடர்பான அறிக்கை வெளியீடு வடகிழக்கின் தமிழர் தாயகப் பகுதியில் வெளியிட்டு விநியோக நடவடிக்கைகள் இடம் பெற்றது. இவ்வாறாக இது குறித்து திருகோணமலையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் இராமநாதன் ஸ்ரீ ஞானேஸ்வரன் தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் செயலாளர் பூட்ரோஸ் காளி ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கையினை கோரிய போது குறித்த அறிக்கையில் ஒரு இனத்தின் தனி மனிதனை முக்கியமாக தேர்ந்தெடுத்து கொள்வதும் இனப்படுகொலையாகும் என கூறப்பட்டிருந்தது.
ஒரு இனத்தின் முக்கியமானவர்களை தனித் தனியாக தேர்ந்தெடுத்து செய்வது இனப்படுகொலையாகத்தான் கருத வேண்டும்.இனப்படுகொலைக்கான சட்டமும் இனப்படுகொலைக்கான நீதியும் அவர்களுக்கு உரித்தானது என்பது தவிர்க்க முடியாத பிரயோகத்திற்குள் வருகின்றது. நிமலராஜனின் கொலை அதுபோன்ற ஊடகவியலாளர்கள் 44 பேரின் கொலை அனைத்துமே தமிழினப்படுகொலையின் ஒரு கூறாகவே இந்த இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அவருடைய விசாரணை அறிக்கை இவ்வளவு காலத்துக்கு பிறகு வெளிவருவதென்பது ஒரு உண்மையை நோக்கிப் போராடுகின்ற ஒரு மனிதனின் மரணமும் அவருடைய சாவின் பின்னும் போராட்டத்தை முன்நகர்த்தும் என்பதற்கு மிக முக்கியமானதொரு ஆதாரமாக மிக முக்கியமான செய்தியாக இந்த கனத்தில் இங்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
ஏன் நாங்கள் போராடுகின்றோம் ஏன் இவ்வளவு இவ் நிகழ்வை செய்கின்றோம் என்றால் சுயநிர்ணய உரிமைகளுக்காக முன் நகரக் கூடியவர்களாக இருக்கின்றோம். ஏன் இந்த சுயநிர்ணய உரிமை முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் பன்னாட்டு சட்டத்தின் பொருளின் படி பொருள் கோரலின் படி இந்த பன்னாட்டு சட்டத்தினை கையகப்படுத்த வேண்டியவர்களாக அல்லது பன்னாட்டு சட்டத்தின் கீழ் கருத்திற் கொள்ளப்பட வேண்டியவர்களாக உலக நாடுகள் மட்டுமே கருத்திற் கொள்ளப்பட வேண்டிய நிலையில் ஏனைய பன்னாட்டு சட்டப் பொருள்களாக ஒரு இனம் கருத்திற்கொள்ளப்பட வேண்டுமாக இருந்தால் அந்த இனம் சுயநிர்ணய உரிமைக்காக தன்னுடைய தன்னாட்சிக்காக எங்களை பொருத்தமட்டில் போராடுகின்ற இனமாக இருந்தால் மட்டுமே அது பன்னாட்டு சட்டத்தின் சரத்துக்களை தரம் குறித்தாக்கி கொள்ளும் பண்பை கொண்டிருக்கின்றது.
ஆகவே இந்த உலகத்தில் நாங்கள் பன்னாட்டு சட்டத்தை எங்களுக்காக செயற்பட வைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் சுயநிர்ணய உரிமைக்காக ஏதோ ஒரு வழியில் போராட தலைப்பட்டவர்களாக போராட முன் நகர்பவர்களாக இருந்தால் மட்டுமே தமிழினம் பன்னாட்டு விசாரணையை கோருவதற்கான ஆகக் குறைந்த தகுதியை கொண்டிருக்கின்றது.
இனப்படுகொலை
எனவே, இவ்வாறான போராட்டங்கள் மரணித்தவர்களை, கொல்லப்பட்டவர்களை இனப்படுகொலைக்கு உள்ளானவர்களை நாங்கள் நினைவேந்துகின்ற இந்த போராட்டங்கள் கூட ஒரு இனத்தின் தன்னாட்சி சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமாக கருதப்படுவதோடு அதன் ஊடாகவே நாங்கள் பன்னாட்டு சட்டத்தை எங்கள் மீது பிரயோகிக்கத்தக்க வலுக்கொண்டவர்களாக மாற்றுவதற்கான இந்த முயற்சியின் ஒரு படியினை நாங்கள் இங்கு தாண்டுகின்றோம்.
இனப்படுகொலைக்குள்ளான ஈழத்தமிழ் ஊடகவியலாளர்களை நாங்கள் என்றென்றைக்கும் நினைவு கொள்வோம் என்றும் இனப்படுகொலைக்கான நியாயத்தை வேண்டி போராடுவோம்" என்றார். இது போன்று திருகோணமலையை சேர்ந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 24.01.2006ல் திருகோணமலையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
அச்சு மற்றும் வானொலி பத்திரிகையாளர் ஐயாத் துறை நடேசன் 31.05.2004ல் சுட்டு கொலை செய்யப்பட்டதுடன் பெரும்பான்மை இன ஊடகவியலாளரான பிரபல ஊடகர் லசந்த விக்ரமதுங்க 08.01.2009ல் சுட்டுகொல்லப்பட்டார். முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த நற்பிட்டி முனை எழுத்தாளர் பலீல் 2005.12.10 ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவ்வாறாக பல வழி முறைகளில் படுகொலை செய்யப்பட்டு ஊடக சுதந்திரம் நீதி இல்லாமல் அச்சுறுத்தளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருகோணமலையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் முன்னால் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவருமான அ.அச்சுதன் தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்தார். "இலங்கையில் ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடந்த காலங்களில் பணியாற்றியுள்ளார்கள்.
யுத்த காலத்திலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களையும் எதிர் கொண்டார்கள். வடகிழக்கு உட்பட தென்னிலங்கை அடங்கலாக 44 ஊடக பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். உரிமைகள் மறுக்கப்பட்டு ஐயாத் துறை நடேசன்,தராக்கி , சுகிர்தராஜன் போன்ற ஊடகர்கள் குறிப்பிட்டு சொல்லக் கூடிய வகையில் பணியாற்றியுள்ளார்கள்.
அவர்களுடைய பேனா முனை மறுக்கப்பட்டு இது வரை நீதி கிடைக்கவில்லை. வடகிழக்கில் பல்வேறு ஊடகத் துறையில் நீண்டகாலமாக மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளியில் கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் துப்பாக்கி முனையில் அவர்கள் வீழ்த்தப்பட்டார்கள். குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தை பொறுத்த வரையில் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகியும் இதுவரை அவருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது. ஊடக தர்மம் குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கின்றது. அவர் உயர் பாதுகாப்பு வலயமான கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு அருகாமையிலேயே சுட்டு படுகொலை செய்யப்பட்டு பல வருடங்கள் கடந்து விட்டன.
அம்பலப்படுத்தப்பட்ட உண்மைகள்
ஆனால் இதுவரை நீதி கிடைக்கவில்லை அது போன்றே ஐயாத் துறை நடேசனும் மட்டக்களப்பில் சுட்டு கொல்லப்பட்டார். தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல சிங்கள ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக முக்கியமாக லசந்த விக்ரமதுங்க இவர் துணிச்சலாக பணியாற்றிய ஊடகவியலாளர் அதாவது பல்வேறு மறைக்கப்பட்ட உண்மைகளை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டிய ஒருவர் எக்னெலி கொட ஒரு முக்கியமான ஊடகர் இவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை.
ஊடகவியலாளர்கள் ஜனநாயகத்தின் முக்கிய பங்குதாரர்களாகவுள்ளனர். ஜனநாயகத்தின் நான்காவது தூண் . ஆட்சி மாற்றத்தை கூட பேனா முனையால் ஏற்படுத்தகூடிய சக்தி வாய்ந்தவர்கள் என்பதை சர்வதேச அளவில் நிரூபித்துள்ளனர். இலங்கையை பொறுத்தமட்டில் யுத்த காலத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் இன்றும் அதே பாணியில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்ற இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கான அழுத்தங்கள் காணப்படுகின்றன. கடந்த காலங்களை ஒப்பிடுகின்ற போது குறைவாக இருந்தாலும் அவர்களுக்கான முழுமையான ஊடக சுதர்திரம் வழங்கப்பட வேண்டும்.
ஒரு நாட்டின் முதுகெழும்பாக இயங்கக் கூடிய பண்பு ஒரு ஜனநாயகம் தலைத்தோங்க வேண்டிய கட்டமைப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஒரு ஊடகமாகும். ஊடகத்தில் பணியாற்றுகின்றவர்கள் சுதந்திரமாக தக்களது கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமை எப்போதும் காணப்பட வேண்டும். குறிப்பாக இன்று ஊடகர்கள் சுதந்திரமாக இயங்குகின்ற போதிலும் மறை முகமான பல செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பதற்கு இவ் அரசு பூரண பங்களிப்பை வழங்க வேண்டும். ஊடகவியலாளர்களின் பாதுகாப்பில் அவர்களது விடயங்களிலும் இவ் அரசு கவனம் எடுக்கும் என நாங்கள் நம்புகின்றோம். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களை நினைவு கூறுவது கடினமாக காணப்பட்டது.
ஆனால் அந்த நிலை புதிய அரசில் சற்று மாற்றமடைந்திருக்கிறது. அது உண்மையில் வரவேற்கத்தக்கது. தற்போது இந்த தடை இல்லை என நான் உறுதிப்படுத்துகிறேன். காரணம் அண்மையில் நிமலராஜனின் நினைவு தினம் வடகிழக்கில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஆகவே தற்போது சுதந்திரமான சூழல் காணப்படுகின்ற நிலையிலும் ஊடகர்களுக்கான பூரணமான பாதுகாப்பான ஒரு கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்க வேண்டும். அப்போது தான் சுதந்திரமாக பயணிக்க முடியும்.
குறிப்பாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான கொலைக்கான பிண்ணனி கண்டறியப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும். திருகோணமலையை பொறுத்தமட்டில் 24.01.2006இல் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சுப்ரமணியம் சுகிர்தராஜனின் படுகொலைக்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அது போன்று ஐயாதுறை நடேசன் 2004.05.31இல் மட்டக்களப்பில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவருடைய படுகொலை விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
மறுக்கப்பட்ட நீதி
உண்மையில் இது போன்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதை யுத்த காலத்தில் பணியாற்றிய ஊடகர் என்பதால் இவ் விடயத்தை முன் வைக்கின்றேன். ஊடக கோட்பாடு ,சட்ட திருத்தங்களின் அடிப்படையில் ஊடக விதி முறைகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும்.
அதற்கு புதிய அரசு முன் வர வேண்டும். பல முக்கிய விடயங்களை ஆவணப்படுத்தவும் நீதியை நிலை நாட்டவும் படுகொலை செய்யப்பட்ப ஊடகவியலாளர்களுக்கான ஒரு நீதிப்பொறிமுறையை உருவாக்க இவ் அரசு சட்ட ரீதியான ஒரு ஆவணத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் இலங்கை போன்ற அழகிய நாடு இன்னும் ஒரு வளமான நாடாக வலம் வருவதற்கு உண்மையில் ஊடகவியலாளர்கள் மறுக்கப்பட்ட நீதிகள் அவர்டளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அனைத்தும் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான ஆணைக் குழுவை உருவாக்கி அதன் மூலம் விசூரனைகள் முன்னெடுக்கப்பட்டு வன்முறைகளை பிரயோகித்து படுகொலை செய்தவர்களுக்கு சட்டத்தின் முன் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் அப்போது தான் எமது நாடு முன்னோக்கிய நிலைக்கு கொண்டு செல்ல முடியும். மீண்டும் கூறுகிறேன் ஊடகவியலாளர்கள் ஒரு நாட்டின் முதுகெழும்பாக காணப்படுகிறார்கள். ஆகவே அவர்களுக்கான சகல நடவடிக்கைகளும் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கும் புதிய திருத்தங்களையும் சட்டத்தில் கொண்டு வர ஆவணம் செய்ய வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்.
இவ்வரசு கடந்து கால அரசுகளை விட சிறப்பான பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதே போன்று ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளிலும் பார்வையை திருப்பி செயற்பட வேண்டும் என கோரிக்கையாக முன்வைக்கின்றேன் என்றார். மேலும் ஊடகர்களின் படுகொலைக்கான நீதி தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் றிப்தி அலி தெரிவிக்கையில் " இலங்கையில் யுத்த காலப் பகுதியில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் பெரும்பாலான தமிழ் பேசும் ஊடகவியலாளர்களே.
குறிப்பாக வடகிழக்கு ஊடகவியலாளர்களே அடங்குவர். கொழும்பில் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டார். அது போன்று நியெஸ் பெஸ்ட், எம்டீவி காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால் இதற்கான நியாயம் கிடைக்கவில்லை. கடந்த ஆட்சியாளர்களும் நியாயத்தை பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை.
தற்போது ஆட்சி மாற்றம் வந்துள்ள நிலையில் ஊழல்களுடன் தொடர்புடைய பழைய சம்டவங்களுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்படுகிறார்கள் உதாரணமாக 2005ல் முன்னால் அமைச்சர் நிமால் லான்சா கைது செய்யப்பட்டார். அது போன்று ஊடகவியலாளர்களின் இது போன்ற சம்பவங்களை அநுர குமார அரசாங்கம் தேடிப் பார்க்க வேண்டும்.
பழைய பயில்களை தட்டி எடுத்து பொறுப்பானவர்கள் யார் என்பதை கண்டு விசாரணை மூலம் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக இனியபாரதி கைது செய்யப்பட்டுள்ளார். யோசப் பரராஜசிங்கத்தின் 2005இல் இடம்பெற்ற சம்பவத்தில் கைதானார். இது போன்று நிமலராஜன் போன்றோர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் தான் ஊடகவியலாளர்களுக்குள்ள அடக்குமுறைகளை இல்லாதொழிக்க முடியும் என்றார். எனவே தான் சுதந்திரமாக தங்களது பணிகளை செய்ய தற்போதைய ஊடகவியலாளர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதுடன் தற்போதைய அரசாங்கம் படுகொலை செய்யப்பட்ட ஊடகர்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்கவும் முன்வர வேண்டும்.










