நியூயோர்க்கில் தமிழர் இனப்படுகொலை நினைவுச் சின்ன கண்காட்சி (Photos)
கனடா பிரம்டன் மாநகரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நினைவுச்சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு மே மாதம் ஈழத்தில் சிங்கள பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய இனப்படுகொலையின்போது லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்திருந்தனர்.
உயிரிழந்த தமிழ் உறவுகளின் நினைவையும் தியாகத்தையும் போற்றிப் பேணும் நோக்குடனும் பல்லின சமூகத்துக்கும் இனப்படுகொலை தொடர்பான செய்திகளைத் தெரியப்படுத்தும் இலக்குடனும் ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும் எனக் கருதிய தமிழ் சமூகத்தினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
நினைவுச் சின்ன கண்காட்சி
பிரம்டன் மாநகரம் அதற்கான இடத்தை நகரின் மையத்தில் தர முன்வந்திருந்தது. அவ்விடத்தில் அமையக்கூடிய சின்னத்தை வடிவமைத்த தமிழ்ச் சமூகத்தினர் கடந்த மாதம் அதை வெளியீடு செய்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து, ஜீலை 1,2,3ம் நாட்களில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கம் நடத்திய கலை, பண்பாட்டு மாநாட்டில் கண்காட்சியாக இந்த வடிவமைப்பைக் காண்பித்திருந்தனர்.
அத்தோடு, இந்தச் சின்னம் வெளிப்படுத்தும் கருத்துகளை ஒரு காணொளியாகவும் ஒளிபரப்பியுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோர் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டதுடன், பல்வேறு தகவல்களையும் அறிந்து சென்றனர். இந்த நினைவுச்சின்னம் அமைவதற்கான நிதி உதவிகளையும் தருவதற்கு என பலரும் முன் வந்திருந்தனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த பல்வேறு பிரமுகர்களும் இந்த இனப்படுகொலை நினைவுச் சின்னம் பற்றிக் கேட்டறிந்தனர்.
இந்தக் கண்காட்சி வழியே தமிழினப் படுகொலை பற்றிய செய்திகளைப் பலரும் அறிந்துகொள்ள வாய்ப்பேற்பட்டிருந்தது.
தமிழர்களின் தேசியப் பூ
தமிழர்களின் தேசியப் பூவான கார்த்திகைப் பூவின் அமைப்பை அடியொற்றியும் ஐந்து கட்டங்களாக வகுக்கப்பட்ட தமிழர் வரலாற்றை உள்ளடக்கியும் இச்சின்னம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
விரைவில் இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பமாகும் எனவும் ஏற்பாட்டளர்களினால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.