பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியருக்கு நீதி கோரி போராட்டம் (Photos)
தலவாக்கலை லோகி தோட்டத்தில் வெட்டப்பட்ட மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த ஆசிரியருக்கு நீதி கோரி இன்றைய (28) தினம் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வேலுசாமி மகேஸ்வரன் என்ற ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இவர் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் கணிதபாட ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் மரணத்துக்கு நீதி கோரி இன்றைய (28) தினம் தோட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னாள் நகர சபை தவிசாளர் அசோக சேபால மற்றும் உறுப்பினர்கள் என பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாதைகள் ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100 பேர்வரை இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இறந்த ஆசிரியருக்கு நீதி வேண்டும், அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும், சட்டவிரோதமாக மரம் வெட்டப்பட்ட அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என தெரிவித்ததோடு இதற்கு சரியான நீதி வழங்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயம் ஒரு தனிநபர் வைத்திருப்பதால் அது தோட்டத்துக்கு சொந்தமான ஆலயம் இதனை தோட்டத்திற்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்க வேண்டுமென கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது. இதன்போது உயிரிழந்த ஆசிரியரின் ஆத்மா சாந்தி அடைய மெழுகுவர்த்தி ஏற்றி அனுதாபத்தை போராட்டக்காரர்கள் செலுத்தினர்.








