சீனா கடல் எல்லையில் விமானத்தை சுட்டு வீழ்த்திய தாய்வான்-செய்திகளின் தொகுப்பு
தாய்வான் கட்டுப்பாட்டுக்குள் உள்ள, சீன கடலோர பகுதியில் அமைந்த தீவின் வான்பரப்பில் பறந்த ஆளில்லா விமானம் ஒன்றை தாய்வான் இராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு, சுயாட்சி பகுதியாக செயல்பட்டு கொண்டிருக்கும் தாய்வான் நாட்டுக்கு கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டார்.
25 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்காவின் உயர் பொறுப்பில் உள்ள ஒருவர், தாய்வானுக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இராணுவ போர் பயிற்சி
பெலோசியின் இந்த சுற்றுப்பயணம் சீனாவால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பெலோசி தாய்வானில் இருந்து புறப்பட்டு சென்றதும், தனது படைபலம் பற்றி உலக நாடுகள் அறிந்து கொள்ள செய்யும் வகையில், தாய்வானை சுற்றி இராணுவ போர் பயிற்சிகளை பல நாட்களாக சீனா நடத்தியது.
இதனால் போர் பதற்றம் தொற்றி கொண்டது. இதன்பின்பு, போர் பயிற்சி நிறுத்தப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க பைடன் அரசாங்கம் தாய்வானுக்கு போர் விமானங்களுக்கான ஏவுகணைகள் உள்ளிட்ட ரூ.8,772 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்கா முடிவு செய்து உள்ளது.
ஆளில்லா விமானம்

இதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கு பைடன் அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில், தாய்வானின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள, சீன கடலோரத்தில் அமைந்த தடை செய்யப்பட்ட ஷியு தீவின் வான்வெளியில் அடையாளம் தெரியாத ஆளில்லா விமானம் ஒன்று பறந்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனை கவனித்த தாய்வான் இராணுவம் அதனை சுட்டு வீழ்த்தி உள்ளது. இதனை தாய்வான் இராணுவ அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது.
தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பை பராமரிப்பதற்காக தேடுதல், கண்காணிப்பு ஆகிய பணிகள் நீடிக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,