மக்கள் போராட்டத்தை அரசு மலினப்படுத்த இடமளியோம்! தையிட்டி காணி உரிமையாளர்கள் திட்டவட்டம்
"எமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது திடமான கோரிக்கை. மக்கள் போராட்டத்தை அரசு மலினப்படுத்த ஒருபோதும் இடமளியோம் என தையிட்டி காணி உரிமையாளர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
தையிட்டியில் மக்களின் காணிகளைச் சுவீகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகவும், மக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்கக்கோரியும் விகாரை முன்பாக நேற்று நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பில் வழங்கிய செவ்வியின்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்கள்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
போராட்டக்களத்தில் அலைமோதியுள்ள மக்கள் கூட்டம்
"தையிட்டி போராட்டக் களத்தில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இது எமக்குக் கிடைத்த பெரும் பலமாகும். திஸ்ஸ விகாரைக்காகக் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளில் விகாரை அமைந்துள்ள காணியைத் தவிர ஏனைய காணிகள் 4 கட்டங்களாக விடுவிக்கப்படும் என்று யாழ். மாவட்ட செயலகத்தில் காணி உரிமையாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது மாவட்ட செயலர் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.

ஆனால், காணிகள் விடுவிக்கப்படும் 4 கட்டங்களுக்கும் நாங்கள் காலவரையறையை விதித்திருந்தோம். இதன்போது மாவட்ட செயலாளர் தடுமாறினார். அவர் அந்த யோசனையில் இருந்து பின்வாங்குகின்றார் என்று எங்களுக்கு உடனே தோன்றியது.
இதுவரைக்கும் மாவட்ட செயலகத்தில் இருந்து காணி விடுவிப்பு தொடர்பில் எங்களுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் வரவில்லை.
காணி விடுவிப்பு தொடர்பான யோசனை
காணி விடுவிப்பு தொடர்பாக யாழ். மாவட்ட செயலர் முன்வைத்த யோசனை, நேற்றைய எமது போராட்டத்தை மலினப்படுத்துவதற்காக அல்லது செயலிழக்கச் செய்வதற்காக அரசால் வகுக்கப்பட்ட உத்திதான் என்று நாங்கள் எண்ணுகின்றோம்.

எமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது திடமான கோரிக்கை. எமது நேற்றைய போராட்டம் தொடர்பாக யாழ். மாவட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தலை வழங்கியிருந்தோம். அதற்கமைய அவர்கள் நேற்று முழுமையாக வந்து இந்தப் போராட்டத்தில் பங்குபற்றினார்கள்.
வவுனியா, முல்லைத்தீவில் இருந்தும் கூட மக்கள் வந்து இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். அவர்கள் தன்னார்வத்துடன் வந்து இந்தப் போராட்டத்தில் பங்குபற்றினார்கள்.
எங்கள் போராட்டத்தை அவர்கள் தங்கள் போராட்டமாக நடத்தினார்கள். இது எமது போராட்டத்துக்குப் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளது. எமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்." - என்றார்கள்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 15 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam