பிரபல கிரிக்கெட் வீரர் தில்ஷான் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாடு
இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி மற்றும் அவதூறு பதிவுகளுக்கு எதிராக நடவடிக்க எடுக்குமாறு முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
நாட்டிற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிய சேவையின் மூலம் கட்டியெழுப்பிய நற்பெயருக்கு, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பொய்ப் பிரசாரங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தில்ஷான் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்பியதும் இந்த முறைப்பாட்டைப் அவர் பதிவுசெய்துள்ளார்.
தனது பெயரை எதிர்மறைப் பிரசாரங்களிலிருந்து மீட்டெடுக்க நியாயமான மற்றும் விரைவான விசாரணையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள அல்லது விளம்பரத்துக்காகப் பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், பொறுப்புணர்வுடன் செயல்படுமாறும் சமூக வலைதளப் பயனர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவதூறான பதிவுகளை வெளியிட்டவர்களுக்கு எதிராகத் தனது வழக்கறிஞர்கள் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகவும், தனக்கு ஏற்பட்ட சேதத்திற்குச் சட்டரீதியான தீர்வுகளைப் பெறவுள்ளதாகவும் தில்ஷான் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளி ஓருவருடன் தில்ஷான், தொடர்பு பேணியதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவல்கள் பொய்யானவை எனவும் இதனால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் தில்ஷான் குற்றம் சுமத்தியுள்ளார்.