வீட்டுக்குள் புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து அட்டகாசம் செய்துள்ள கும்பல்
கோப்பாய் - பூதர்மடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பிசுங்காண் போத்தல்களுடன் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மற்றும் வீட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன், வீதியில் சென்றவர்களையும் வாளினை காட்டி அச்சுறுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
கோப்பாய் சந்தியில் இராணுவத்தினர் வீதிரோந்து காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போது முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சமூகவிரோத கும்பலே இந்த செயலலை செய்துள்ளது.
தனிப்பட்ட வாய்த்தர்க்கத்தினை பழிவாங்க இளைஞன் ஆவா கைக்கூலிகளை அமர்த்தி வீட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த வீட்டுக்கு முன்னால் உள்ள பழக்கடை வியாபாரம் நிலையமும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் வீட்டு யன்னல்கள், மோட்டார் சைக்கிள், மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தின் கண்ணாடி என்பன அடித்துடைத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் (58) என்ற முதியவர் வன்முறை கும்பலின் தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் வன்முறை சம்பவத்தினை மேற்கொண்ட குழுவினர் வந்த மோட்டார் சைக்கிள் இலக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



