மருத்துவ உலகில் சாதனை படைத்த சுவிஸ் மாணவி
மருத்துவ உலகில் முதல் முறையாக மனிதனுக்கு நோயை ஏற்படுத்தும் பற்றீரியாவை கொல்லக்கூடிய வைரஸ் ஒன்றை சுவிட்சர்லாந்தினை (Switzerland) சேர்ந்த மாணவியொருவர் கண்டுபிடித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் மன்சென்ஸ்டீன் (Münchenstein) என்னுமிடத்தைச் சேர்ந்த நோரா ஆர்டிகோ (Nora Artico) என்னும் 19 வயதுடைய பாடசாலை மாணவியே இந்த சாதனையை படைத்துள்ளார்.
பற்றீரியா மூலம் பரவும் நோய்களுக்கான மருந்தாக ஆன்டிபயாட்டிக் என்னும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆன்டிபயாட்டிக் மருந்து
இந்த ஆன்டிபயாட்டிக் என்பது பற்றீரியா என்னும் நோய்க்கிருமிகளை கொல்வதன் மூலமோ அல்லது அவற்றை அதிகரிக்க விடாமல் தடுப்பதன் மூலமோ, நோய்களைக் குணமாக்கும் ஒருவகை மருந்துகள் ஆகும்.
எனினும், இந்த ஆன்டிபயாட்டிக் எனும் மருந்துகளில் ஒரு பிரச்சினை உள்ளது. அதாவது, நம் உடலுக்குள்ளும் தோலின் மீதும், ஏராளம் நன்மை செய்யும் பற்றீரியாக்கள் உள்ளன.
குறிப்பிட்ட நோய்க்காக ஒருவர் இந்த ஆன்டிபயாட்டிக் மருந்தை உட்கொள்ளும்போது, அந்த மருந்து குறிப்பிட்ட நோயை உண்டாக்கும் பற்றீரியாவைக் கொல்வதுடன், மனித உடலுக்கு நன்மை பயக்கும் பற்றீரியாக்களையும் கொன்றுவிடுகிறது.
எனவே, மனிதர்கள் அடிக்கடி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதால், வயிற்றுக்குள் இருக்கும் கிருமிகள், காலப்போக்கில், அந்த ஆன்டிபயாட்டிக்கையே எதிர்த்து தாக்குப்பிடித்து வாழும் திறனை வளர்த்துக்கொள்கின்றன. அந்த தாக்குப்பிடிக்கும் திறன் drug-resistant என அழைக்கப்படுகிறது.
இந்த drug-resistant பற்றீரியாவில் ஒன்று, மனிதர்களுக்கு ஏதாவது ஒரு நோயை ஏற்படுத்துமானால், அதற்கு மருந்தே கிடையாது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
காரணம், மருந்து கொடுத்தாலும் அந்த பற்றீரியா அழிவடையாது என்பதுடன் மருந்தை எதிர்த்து தாக்குப்பிடித்து மரணம் ஏற்படும் நிலையை உருவாகும் என கூறப்படுகின்றது.
புதிய வைரஸ்
இதற்கான தீர்வாகவே சுவிட்சர்லாந்தினை சேர்ந்த மாணவி புதிய வைரஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
நுண்ணுயிர்களில் பற்றீரியா, வைரஸ், பூஞ்சை என பலவகை உள்ளன. அவற்றில் பற்றீரியாக்களையே கொல்லக்கூடிய பாக்டீரியோபேஜ் (Bacteriophage) என்னும் ஒரு வகை வைரஸையே அவர் கண்டுபிடித்துள்ளார்.
இந்த பாக்டீரியோபேஜ் (Bacteriophage) என்னும் வைரஸில் சில குறிப்பிட்ட வைரஸ்களை தேர்ந்தெடுத்து, அதை பற்றீரியா தொற்றுக்கு ஆளான நோயாளிகள் உடலில் செலுத்தும்போது, அந்த பாக்டீரியோபேஜ் (Bacteriophage), அந்த நோய்க்கிருமியைக் கொன்றுவிடும்.
முக்கியமான விடயம் என்னவென்றால், அந்த நோயாளிக்கு சிகிச்சைக்காக ஆன்டிபயாட்டிக்குகளைக் கொடுத்தால், அந்த ஆன்டிபயாட்டிக்குகள், அந்த நோய்க்கிருமியைக் கொல்வதுடன் கூடவே அந்த நோயாளியின் உடலிலுள்ள நல்ல நுண்ணுயிர்களையும் கொன்றுவிடும்.
ஆனால், இந்த பாக்டீரியோபேஜ் (Bacteriophage) வைரஸோ, நல்ல நுண்ணுயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதுடன் கெட்ட கிருமிகளை மட்டுமே கொல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தகைய ஐந்து பாக்டீரியோபேஜ் (Bacteriophage) வைரஸ்களைக் கண்டுபிடித்த சுவிட்சர்லாந்தினை சேர்ந்த மாணவிக்கு, Swiss Youth Research மற்றும் European Union Contest for Young Scientists என்னும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |