இலங்கை இனிப்புப் பண்டத் தொழில்துறையாளர்களுக்கு கிட்டவுள்ள புதிய வாய்ப்பு
இலங்கையில் இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நேற்று (24.01.2024) பிற்பகல் நடைபெற்ற இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கத்தின் 30 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
போட்டிமிக்க ஏற்றுமதிப் பொருளாதாரம்
அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது, “சிலாபம் மற்றும் குருநாகல் பிரதேசங்களில் உள்ள தோட்டங்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும், ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை , அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எல்கடுவ உள்ளிட்ட ஏனைய காணிகளையும் இதற்காகப் பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை பயன்படுத்தப்படாத மகாவலி ஏ மற்றும் பி வலயங்களில் பயிர்ச்செய்கையையை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும்.
மேலும், நாட்டில் போட்டிமிக்க ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்.
வர்த்தக உடன்படிக்கை
ஏனைய நாடுகளுடன் தற்போதுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளையும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைகளையும் வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
அத்துடன், தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தென்னை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றையும் நவீனமயப்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆராய்ச்சித் துறைக்காக சுமார் 08 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இனிப்புப் பண்டத் தொழில்துறையினூடாக தேசிய பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, நாட்டில் உள்ள எட்டு முன்னணி இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
