நாடளாவிய ரதீயில் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம்: மக்கள் பாதிப்பு (Video)
தொடருந்து நிலைய அதிபர்களின் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்று ஐந்து அலுவலக தொடருந்துகளின் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே அடையாளப் பணிப்புறக்கணிப்புக்குப் பதில் இன்று (10.05.2023) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நானுஓயாவிலிருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு சேவையில் ஈடுபடும் டிக்கிரி மெனிகே கடுகதி தொடருந்து சேவை இன்று (10.05.2023) இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை கணேவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை வரையான அலுவலக தொடருந்து சேவையும் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
அளுத்கமவில் இருந்து கொழும்பு கோட்டை வரை அதிகாலை 3.40 மணிக்கு வந்து சிலாபம் வரை செல்லும் தொடருந்து இன்று நீர்கொழும்பு வரை மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து புத்தளம், நூர்நகர் வரை அதிகாலை 4 மணிக்கு சேவையில் ஈடுபடும் தொடருந்து சிலாபம் தொடருந்து நிலையம் வரை மட்டுமே இன்று சேவையில் ஈடுபடும் மேலும், நூர்நகரில் இருந்து கோட்டைக்கு வரவேண்டிய வேண்டிய மந்தகதி தொடருந்து இன்று சிலாபம் தொடருந்து நிலையத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கும்.
கோட்டையில் இருந்து நீர்கொழும்புக்கு காலை 7 மணிக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட கடுகதி தொடருந்து இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் இருந்து கோட்டை வரை காலை 9 மணிக்கு புறப்படும் தொடருந்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி மாலை 6.15 மணிக்கு சேவையில் ஈடுபடுத்தப்படும் தொடருந்து கோட்டை வரையிலான அனைத்து தொடருந்து நிலையங்களிலும் நிறுத்தப்படும்.
கடலோர பாதையில் அதிகாலை 4.20 மணிக்கு வந்து சிலாபத்தில் இருந்து மொரட்டுவை நோக்கிப் பயணிக்கும் தொடருந்து மருதானை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 6.57க்கு பாணந்துறை புகையிரத நிலையம் வரை பயணத்தை மேற்கொண்டுள்ளது.
குறித்த தொடருந்து வழமையான நிறுத்தங்களுக்கு மேலதிகமாக தெஹிவளை தொடருந்து நிலையத்தில் இன்று நிறுத்தப்படும்.
இதேவேளை, காலை 6.30 மணிக்கு அவிசாவளையில் இருந்து கோட்டை வரை சேவையிலீடுபடும் மந்தகதி தொடருந்து இன்று சேவையில் ஈடுபடவில்லை. மற்ற தொடருந்துகள் நேரம் தாழ்த்தி சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
செய்தி : அனாதி
மலையகம்
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பிததுள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, மலையகத்திற்கான சகல தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தொடருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பொது பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக மலையக பேருந்து தரிப்பு நிலையங்களில் பல தனியார் பேருந்துகள் மற்றும் இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: திருமால்
புத்தளம்
பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு அதிகாரியொருவரை நியமிப்பது தொடர்பான பிரச்சினையை முன்வைத்து இன்று தொடருந்து திணைக்கள ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக புத்தளத்திலிருந்து கொழும்பு கோட்டை செல்லும் தொடருந்து சேவைகளும் கொழும்பிலிருந்து புத்தளம் வருகைத் தரும் தொடருந்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் தொடருந்து நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் புத்தளத்திலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கிச் செல்லும் தொடருந்து சேவை இரத்து செய்யப்பட்டிருந்ததாகவும் பின்னர் காலை 9.55 மணியளவில் முன்னெடுக்கப்படும் புத்தளம் கொழும்பு கோட்டை தொடருந்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டிருந்ததாகவும் கொழும்புலிருந்து பயணிகள் மற்றும் அலுவலக ஊழியர்களை ஏற்றி வருகைத் தரும் தொடருந்து சேவையும் இரத்து செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
செய்தி : அசார்
மட்டக்களப்பு
தொடருந்து நிலைய அதிபர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தொடருந்து நிலைய பிரதம அதிபர் தெரிவித்துள்ளார்.
தினமும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு மூன்று புகையிரத சேவைகளும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு மூன்று சேவைகளும் மட்டக்களப்பிலிருந்து மாகோவிற்கு இருசேவைகளும் இடம் பெற்று வந்தன தற்போதைய வேலை நிறுத்தத்தினால் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு தொடருந்து நிலையம் தறபோது பயணிகளின் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
செய்தி:ருசாத்

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
