மக்கள் குடியிருப்பில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணி இடைநிறுத்தம்
வவுனியா - உக்குளாங்குளம் மக்கள் குடியிருப்பில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதையடுத்து அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக இன்றைய தினம் கோபுரம் அமைக்கப்படும் இடத்திற்கு சென்ற நகரசபை தவிசாளர், செயலாளர் உள்ளிட்ட குழுவினரால் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
உக்குளாங்குளம், திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன், இவ்விடயம் குறித்து நகரசபையினருக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை உக்குளாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் ஒன்றுகூடிய கிராம மக்கள் நகரசபை தவிசாளர் செயலாளர் நகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர் ஒன்றுகூடி மக்களின் கருத்து தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
இதையடுத்து கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பகுதிக்கு சென்ற குழுவினர் கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக தடுத்து நிறுத்துமாறு காணி உரிமையாளரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து ஏற்கனவே நகரசபையினால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய நகரசபை செயலாளர், தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு இப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர்.
எனவே இதன் பணிகளை இடைநிறுத்துமாறு காணி உரிமையாளர் ஊடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தடை உத்தரவு பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே அதுவரையிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு இன்றைய தினம் நகரசபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் அப்பகுதி கிராம மக்களின் கையெழுத்திட்ட முறைப்பாட்டு கடிதம் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பதற்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் என்பன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டு தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்துமாறு கோரிய முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்தே இன்றைய தினம் மக்களுடன் அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
