முன்னாள் இராஜாங்க அமைச்சர் தொடர்பில் போலி தகவல்! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
இணையப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் கீழ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் குறித்து, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக கூறப்படும் மன்னாரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சரைப் பற்றிய தவறான தகவல்களை உள்ளடக்கிய ஒலிப்பதிவுகளை பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் பரப்பியதாக, குறித்த வர்த்தகர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குற்றம் சுமத்தப்பட்டவருக்கு 5000 ரூபாய் அபராதத்தையும் கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் திலின கமகே நேற்று (28.11.2024) விதித்துள்ளார்.
முதல் வழக்கு
இந்தநிலையில், தீர்ப்பின்போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் தொடர்பில் சமூக ஊடகங்களில், பிரதிவாதி வெளியிட்ட அனைத்து அறிக்கைகளையும் உடனடியாக நீக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |