இலங்கையில் தப்பியோடிய குற்றவாளியை விமான நிலையத்தில் பிடித்த பொலிஸார்
இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்? நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஒகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி பொரளை கர்தமனாவத்தை பகுதியில் ஒருவரை சுட்டுக் கொல்ல முயன்ற சந்தேக நபரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோது குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முக அங்கீகார முறை
விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள முக அங்கீகார முறை மூலம் சந்தேக நபரை அடையாளம் கண்ட பின்னர், அவர் கைது செய்யப்பட்டு பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சுற்றுலா விசாவில் டுபாய் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரளை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



