புலம்பெயர் இலங்கையர்கள் தொடர்பில் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்பவர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாடு வாழ். இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2.5 - 3 மில்லியன் மக்கள்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,''இலங்கையர்கள் இதுவரையில் 5 அலையாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். 2.5 - 3 மில்லியன் வரையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருப்பதாக அண்ணளவாக கணக்கிட்டுள்ளோம்.
அவர்களில் 1.6 மில்லியன் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர்.
தொழிலாளர்கள் பதிவு செய்துவிட்டு செல்வதால் அவர்களுடைய தகவல்கள் எம்மிடத்தில் உள்ளன. ஏனைய காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய தகவல்கள் சரியான வகையில் இல்லை.
ஆனால், விரைவில் மற்றைய தூதரங்களைத் தொடர்பு கொண்டு இவர்கள் பற்றிய தகவல்களை நாம் சேகரிக்க முயற்சிக்கிறோம்.
அடிப்படை தகவல்கள்
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களின் சுய விருப்பத்தின் பேரில் சில அடிப்படை தகவல்களை மாத்திரம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
இந்த தகவல்களின் இரகசியத்தன்மை முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதோடு, இந்த அலுவலகம் வெளிநாட்டு வாழ். இலங்கையர்களையும் தாயகத்தையும் ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாக செயற்படும்.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால வரவு செலவு திட்டத்தில் வெளிநாட்டு வாழ். இலங்கையர்களுக்கான நிதியம், அலுவலகம், அலுவலகச் சட்டமூலம் உள்ளிட்ட மூன்று விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.
அதற்கமைய வெளிநாடு வாழ். இலங்கையர்களுக்கான அலுவலகம் கடந்த வருடத்தின் இறுதியில் கொழும்பு பழைய சார்டட் கட்டடத்தில் அமைச்சரவை அனுமதியுடன் திறந்து வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.