இலங்கையில் குறைக்கப்படும் சத்திரசிகிக்சைகள்! மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கையில் நிலவும் நெருக்கடி காரணமாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளமையினால் திங்கட்கிழமை (20) முதல் பல சத்திர சிகிச்சைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் இருதய மயக்க மருந்தியல் நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறையினருக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில்,பொது மக்களின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக எரிபொருள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமையே இந்த தீர்மானத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பம்
இந்நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூட, 6 முதல் 10 மணிநேரம் வரை எரிபொருள் வரிசைகளில் செலவழிப்பதாகவும் வைத்தியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்களை மாத்திரம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறைந்த எண்ணிக்கையிலான கனிஷ்ட வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், தொழிநுட்ப பணியார்கள் உள்ளிட்டோர் கடமைகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முக்கியமான மற்றும் அவசரமான சத்திர சிகிச்சைகளை மாத்திரம் உடனடியாக செய்ய முடியும் என்றும் நிபுணர்கள் கடிதமொன்றினை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.