சுரேஷ் சாலேவின் இறுதி உயில் மற்றும் சட்ட ஆவணங்கள்..! உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அவசர கடிதம்
முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலேயின் சட்ட ஆலோசகரான அசித் சிறிவர்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில், சுரேஷ் சாலேவின் உடல் மற்றும் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை உடனடியாக வைத்திய சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சாலே தனது இறுதி உயில் மற்றும் சட்ட ஆவணங்கள் தயாரிப்பு
சுரேஷ் சாலேவிற்கு தகுதிவாய்ந்த சுயாதீன வைத்திய நிபுணர்களால் உடனடி வைத்திய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், முழுமையான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கக்கூடிய பொருத்தமான வைத்தியசாலைக்கு அவரை அவசரமாக மாற்ற வேண்டும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுரேஷ் சாலே தனது இறுதி உயில் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஆவணங்களைத் தயாரிப்பதற்காக, தனது சட்டத்தரணியைச் சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுரேஷ் சாலேயின் வாக்குமூலங்களும் , அவரது உடல் மற்றும் மனநிலை கடுமையாக மோசமடைந்து வருவதையும், தனது நல்வாழ்வு, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்து முடிவெடுக்கும் திறனை அவர் இழந்துவிட்டதையும் தெளிவாககாட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல்
அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சூழல்கள் அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, அந்த சட்ட ஆலோசகர், குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநருக்குப் பல முக்கிய அம்சங்களின் கீழ் ஒரு கோரிக்கையை அனுப்பியுள்ளார்.
இதன் காரணமாக இக்கருத்துகளைக் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், தனது கட்சிக்காரருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்படக்கூடிய நீதிமன்ற, குற்றவியல், அரசியலமைப்பு அல்லது சர்வதேச சட்டக் நடவடிக்கைகளின் போது இக்கடிதம் ஒரு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் என்றும் பணிப்பாளருக்குத் தெரிவித்துள்ளார்.
அரச சாட்சியாக மாறிய சஹ்ரானின் நெருங்கிய சகா..! நள்ளிரவு வரை நீடித்த விசாரணை - அம்பலமான இரகசிய தகவல்கள்