அரசின் புதிய சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் கருத்து சபாநாயகரிடம் கையளிப்பு
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் எனும் முன்மொழியப்பட்ட சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் கருத்து, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் இன்று (10) தெரிவித்துள்ளது.
அரசாங்கம் அண்மையில் இந்த பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது; இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையில், முன்மொழியப்பட்ட இந்த சட்டமூலத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்கச் செய்யும் வகையில் திருத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
முக்கியமான சிக்கல்கள்
இந்த சட்டமூலத்தில் சில சாதகமான அம்சங்கள் இருந்தாலும், கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பல முக்கியமான சிக்கல்கள் இன்னும் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, தடுப்புக்காவல் உத்தரவுகள் அனைத்தும் உடனடியாகவும் திறம்படவும் நீதித்துறை கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், தடுப்புக்காவல் தொடர்பான மேல்முறையீடுகளை விசாரிக்கும் சுதந்திர மறுஆய்வுக் குழு உண்மையாகவே சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பயங்கரவாதம் என்பதற்கான வரையறையானது, சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களை நீக்கி, திட்டமிட்டு மரணத்தை விளைவிக்கும் அல்லது கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்தும் செயல்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.