தமிழ் மக்களுக்கு சமஸ்டித் தீர்வுக்கான ஆதரவை வெளிப்படுத்தவேண்டும் : கஜேந்தின் எம்.பி. வலியுறுத்தல்
தமிழர் தேசத்தை அங்கீகரித்து தமிழர்கள் ஒருபோதும் இழக்கமுடியாத சுயநிர்ணய உரிமையை, அனுபவிக்க கூடியதுமான ஒரு சமஸ்டித் தீர்வுக்கான ஆதரவை வெளிப்படுத்தவேண்டும் என பொதுநலவாய அமைப்பின் தென் ஆசிய பகுதிக்குப் பொறுப்பதிகாரியான Lesley Craig அம்மையார் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற.உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழிலுள்ள (Jaffma) தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினைக்கான அடிப்படை
மேலும் தெரிவிக்கையில், “கடந்த 75 வருடங்களாக இலங்கை அரசு கடைபிடித்துவரும் கொள்கைகளும், தீர்க்கப்படாமல் நீண்டு செல்லும் இனப்பிரச்சினையுமே இலங்கையின் இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குப் பிரதான காரணங்களாகும்.
இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் பொருளாதாரத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.
இந்நிலையில், இலங்கையில் இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணியாக அமைந்தது இலங்கையிலிருக்கும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பாகும்.
எனினும், இலங்கை அரசியலமைப்பில் 13ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு முற்றுமுழுதாக நடைமுறையில் இருக்கும்போதே தமிழ்த் தேசம் மீதான இலங்கை அரசின் இனவழிப்பு நடைபெற்றிருந்தது.
நீதிமன்றங்கள் தீர்ப்பு
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு புரிந்த இனவழிப்புக்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை போன்றவற்றிற்கும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
13ம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து, அதன் அதிகாரங்கள் குறித்து இலங்கையின் மீயுயர் நீதிமன்றுகளில் ஏறத்தாழ 30 வழக்குகள் விசாரிக்கப்பட்டு அதன் தீர்ப்புகள் அனைத்தும், அரச கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரைக்கும், அனைத்து அதிகாரங்களும் , கொழும்பை மையப்படுத்திய மத்திய அரசிடமே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அதிகார பகிர்வுக்கு எதிராகவே நீதிமன்றங்கள் தீர்ப்புகளை அளித்திருக்கிறன.
உச்ச நீதிமன்று 13ம் திருத்த அதிகாரங்கள் குறித்து இதுவரைகாலமும் வழங்கிய தீர்ப்புக்களின் அடிப்படையிலும், 13ம் திருத்தமானது, இலங்கையின் சட்ட வரம்புகளின் பிரகாரம் அது முழுமையாக அமுல்படுத்தப்பட்டே உள்ளது.
போரால் பாதிக்கப்படட பிராந்தியம்
மேலும் எதிர்காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்களில் பாதிக்கப்பட்ட தரப்பு தமிழர்கள் என்பதனைத் தெளிவாக குறிப்பிட பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை போரினால் அழிவடைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் கடந்த 15 ஆண்டுகளாக இலங்கை அரசினால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தினை போரால் பாதிக்கப்படட பிராந்தியமாகப் பிரகடனம் செய்யவும் பிரதேச அபிவிருத்திக்கென சர்தேச நிதி உதவியைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க பிரித்தானிய அரசு இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலிலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கேட்கப்பட்டபோது அதற்கு மாறி மாறி ஆட்சிப்பீடமேறும் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் கட்டமைப்புசார் இனவழிப்பையும் தீவிரப்படுத்திவரும் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணப்பதென எமது அரசியல் இயக்கம் தீர்மானித்துள்ளது” எனவும் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |