மலையக அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவு : அமைச்சர் ஜீவனிடம் வழங்கப்பட்டுள்ள உறுதி(Photos)
மலையக மறுமலர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பற்றிக்கிற்கும் இடையில் இன்று (01.12.2023) நடைபெற்ற சந்திப்பின் போதே பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.
தேவையான உதவிகள் வழங்கப்படும்
இதன்போது தமது அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், கொள்கை ரீதியில் ஏற்படவுள்ள மாற்றங்கள், எதிர்கால வேலைத்திட்டங்களுக்கான வியூகங்கள் தொடர்பில் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், அனைவருக்கும் சுகாதார பாதுகாப்புடன் குடிநீரை தடையின்றி
வழங்குவதற்காகவும், நீர் கட்டமைப்பை ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவருவதற்கான
வேலைத்திட்டம் பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.
மலையக பெருந்தோட்ட பகுதிகளின் நிலவரம், அதனை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், அதற்கு பிரிட்டன் எவ்வாறு பங்களிப்பு வழங்கலாம் என்பன பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், சமகால அரசியல் நிலவரம், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது.
மேலும், அமைச்சர் கூறிய விடயங்களை செவிமடுத்த உயர்ஸ்தானிகர், தமது தரப்பில் இருந்து தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |