வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர்
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிவஞானம் சிறீதரன், தான் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடமாட்டார் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் போட்டியிடவுள்ளதாக சுமந்திரன் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் நேற்று, யாழ். நல்லூரில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
நிலைப்பாடு
இந்தச் சந்திப்பின் போது, ''அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தானே களமிறங்கப் போவதாக சுமந்திரன் எங்களிடம் கூறினார்."என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
இது குறித்து த.சித்தார்த்தன் மேலும் கூறுகையில், "ஆனால், சுமந்திரனின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற விடயங்கள் குறித்து எதுவும் நாங்கள் பேசவில்லை.
மேலும் உள்ளூராட்சி சபைகளில் ஒன்றிணைந்து ஆடசியமைப்பது குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டாலும் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவது தொடர்பில் எதுவும் பேசவில்லை.'' என்று கூறியுள்ளார்.
