இடைக்கால தேர்தலில் பூரண திருப்திக்கான தேர்வு இல்லை! ஜனாதிபதி தெரிவு தொடர்பில் சுமந்திரன்
அடுத்த தேர்தலில் மக்களது தீர்ப்பு கொடுக்கப்படும் வரை டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதி பதவியை நம்பிக்கை பொறுப்பாக மட்டுமே வைத்திருப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில் மேலும், இன்றைக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் இடைக்கால ஜனாதிபதிக்கான தேர்தலில் எமக்கு முன்பாக இருக்கும் தெரிவுகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக கவனமாக ஆராய்ந்து, டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளோம்.
நாடாளுமன்றத்திற்கு உள்ள கடப்பாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து இறக்கிய மக்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இடைக்கால ஜனாதிபதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டை ஆள்வதற்கான அங்கீகாரத்தையும் தார்மீக அதிகாரத்தையும் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு நாடாளுமன்றத்துக்கு உள்ளது.

நீண்ட போரின் தாக்கங்களாலும் சகல அரசாங்கங்களினது புறக்கணிப்பாலும் பொருளாதார ரீதியில் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்து மக்களும் இன்று பாரிய பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இப்படியான சூழ்நிலையில் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் பின் தேவையாக இருந்த அரசியல் விழிப்புணர்ச்சியின் பின்னர், மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அவர்களின் நம்பிக்கையை சம்பாதிக்ககூடிய அரசாங்கங்கமொன்று அத்தியாவசியமாகும்.
அரசியல் தீர்வு உள்ளடங்களான ஆட்சி முறை மாற்றம்
போராட்டமானது எண்ணிக்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள், போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல்; நீதியானதும் நிலைத்து நிற்க கூடியதுமான அரசியல் தீர்வு உள்ளடங்கலாக ஆட்சி முறையில் அடிப்படையிலான மாற்றங்களை கோரியிருந்தது.

த.தே.கூ. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் அதேவேளையிலே அனைவரையும் உள்ளடக்கும் ஐக்கிய இலங்கையை மையமாக வைத்து தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்போம். விசேடமாக பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் எமது மக்களுக்கு இது அத்தியாவசியமானதாகும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு
எல்லா மக்களுக்கும் செவிசாய்த்து, உள்வாங்கி, சமபிரஜைகளாக மதிப்பதே பொருளாதார மீட்சிக்கும் நிலையான ஆட்சிக்கும் வழிகோலும் என்பது எமது நம்பிக்கை. பொருளாதார வளர்ச்சிக்கும் சுபீட்சத்துக்கும் அத்தியாவசியமான தமிழ் மக்களுக்கான நீதியான அரசியல் தீர்வுக்கு தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம்.

இந்த இடைக்கால தேர்தலில் பூரணமாக திருப்திப்படக் கூடிய தேர்வு இல்லை என்பதை அறிவோம். டலஸ் அழகப்பெரும இதில் வெற்றி பெறுவாராக இருந்தால் 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செய்யவும், மக்கள் எதிர்பார்க்கிற பொருளாதார மீள் எழுச்சியை ஏற்படுத்துவதிலும் நாம் அவரை பொறுப்புக்கூற வைப்போம்.
அடுத்த தேர்தலில் மக்களது தீர்ப்பு கொடுக்கப்படும் வரை அவர் இந்த ஜனாதிபதி பதவியை நம்பிக்கை பொறுப்பாக மட்டுமே வைத்திருப்பார்.
இன்றைக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் இடைக்கால ஜனாதிபதிக்கான தேர்தலில் எமக்கு முன்பாக இருக்கும் தெரிவுகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக கவனமாக ஆராய்ந்து, திரு. டலஸ் அளகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளோம். 1/10
— M A Sumanthiran (@MASumanthiran) July 20, 2022
மேலதிக தகவல் - ராகேஷ்