மக்கள் சார்பில் ஆஜராகி தீர்வை பெற்றுக் கொடுக்க தயாராகும் சுமந்திரன்
கௌதாரிமுனை சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீளாய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மக்கள் சார்பில் ஆஜராகி தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கௌதாரிமுனை பகுதியில் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் மேன்முறையீட்டு வழக்குக்கான அழைப்பு கிடைத்த 11 பேரையும் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களிற்கு எதிராக இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி நீதிமன்றம் வரை சென்றனர்.
இதன்போது கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பிரதேசத்தின் பாதுகாப்பிற்கு சார்பாகவும், பொது மக்களுக்கு சார்பாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த வழக்கில் திருப்தி அடையாத நிறுவனத்தினர் வழங்கப்பட்ட தீர்ப்பினை மீளாய்வு செய்யுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் பிரதேச மக்கள் சார்பில் அழைக்கப்பட்டுள்ள 11 பேரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண்ணகழ்வு மேற்கொண்ட நிறுவனத்திற்கு எதிராக பிரதேச மக்கள் விசேடமாக பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்து அதனை தடுத்து நிறுத்தி நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றிருந்தார்கள்.
அந்த நீதிமன்ற வழக்கிலே ஊருக்கு சார்பாகவும், நிறுவனத்திற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது மாபெரும் வெற்றி. மக்களிற்கான வெற்றி.
ஆனால் அந்த தீர்ப்பிற்கு எதிராக அந்த நிறுவனங்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிலே மீளாய்வு மனுவொன்றை சமர்ப்பித்திருக்கின்றார்கள்.
அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற போது மக்கள் சார்பில் நாங்கள் ஆஜராகி, நீதியை பெற்றுக் கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
