பட்டப்பகலில் இடம்பெறும் படுகொலைகளை நியாயப்படுத்தும் அரசாங்கம்! கடுமையாக சாடிய சுமந்திரன்
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக் கூறி பொது வெளியில் பட்டப்பகலில் இடம்பெறும் படுகொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கும், பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசு நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்
அதன்படி பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு வரும் அதேவேளை, மறுபுறம் பாதாள உலகக் குழுவினர் என அடையாளப்படுத்தப்படும் பலர் பொதுவெளியில் கொல்லப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

அதுமாத்திரமன்றி அரசு பொது வெளியில் நிகழும் இவ்வாறான படுகொலைகளை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கொல்லப்படுவதாகக் கூறி நியாயப்படுத்தி வரும் போக்கு தொடர்பில் பலரும் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இது பற்றிக் கருத்துரைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைத் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
கொலைச் சம்பவங்கள்
இருப்பினும் அதனைக் காரணமாகக் கூறி பொது வெளியில் பட்டப்பகலில் இடம்பெறும் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு அரசு முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாறாக சட்டம், ஒழுங்கை உரியவாறு பேண வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த வருடத்தில் இதுவரை சுமார் 50 இற்கும் மேற்பட்ட இவ்வாறான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இனிவரும் காலங்களில் இத்தகைய சட்டவிரோத படுகொலைகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.