தமிழரசுக் கட்சிக்கு பொருத்தமான தலைவர் யார்..! பொருந்துவது சுமந்திரனா சிறீதரனா
தமிழரசுக் கட்சிக்கு பொருத்தமான தலைவர் யார்? தகைமை உடையவர்கள் யாராகவும் இருக்கலாம் இருப்பினும் அப்பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்குள் பொருத்தமானவர் யார் என்பதை பண்புகள் ரீதியாக ஆராய்கின்றது இக்கட்டுரை.
கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றமையால் ஒரு கட்சிக்கு தலைவராகும் அடிப்படைத் தகுதியற்றவராக இருக்கின்றார். அவரை இந்தப் பந்தியுடன் நாங்கள் விடுவித்து எஞ்சிய இரண்டு வேட்பாளர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர்களது பொருத்தம் தொடர்பில் ஆராயலாம்.
தொலைநோக்குடைய மூலோபாயச் சிந்தனை
ஒரு நல்ல கட்சித் தலைவருக்கு கட்சி தொடர்பான தெளிவான அரசியல் எதிர்கால மூலோபாயச் சிந்தனை இருக்கவேண்டும். உதாரணமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெளிவானதொரு மூலோபாய சிந்தனை இருக்கின்றதை அவதானிக்க முடிகின்றது. மத்திய அரசுடன் அவர் இணைந்து செயற்படும் முறையும் அவரது கருத்தியலுக்கு அமைவாக சிறப்பானதொரு சிறிய கட்சிக்குரிய மூலோபாய சிந்தனையாக கருத முடியும்.
தமிழரசுக் கட்சி வேட்பாளர்களில் நல்லாட்சி அரசின் காலத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பிலும் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து இயங்கியமை தொடர்பிலும் மிகவும் சிறப்பான தொடர்பாடலையும் மக்களுக்கு அரச தலைவர்களுடன் காட்சி தருவதிலேயும் சிறீதரனைவிடவும் சுமந்திரன் பலமடங்குகள் முன்னிலையில் தோன்றிச் செயற்பட்டிருந்தார்.
இவைகள் 04 வருட காலப்பகுதிக்குள் முழுமையுமாக முடங்கவேண்டிய சூழ்நிலையினைத் தோற்றுவித்திருந்தது. இவ் இணக்கப்பாடுகளிலும் அன்றைய தமிழ்தேசிய கூட்டமைப்பின் அனைத்து பணிகளிலும் தனக்கென ஒரு தனியிடத்தினையும் நிழல் நிறைவேற்று அதிகாரத்தினையும் சுமந்திரன் கொண்டிருந்தார் என்பதை அனைவரும் நன்றாக அறிந்தவிடயம்.
இப் பந்தம் தோற்றுப்போனமை ஒரு தொலைநோக்குடைய மூலோபாயச் சிந்தனைக்கு கிடைத்த தோல்வி என்பது உறுதியாகின்றது. தேசிய அரசியல் மட்டத்தில் தனக்கு கிடைத்த தனது தொலைநோக்குடைய மூலோபாயச் சிந்தனையை நிழல் தலைவராக செயற்பட்டகாலத்தில் சுமந்திரன் நிறுவத் தவறிவிட்டார். மாறாக இருவரும் சமதளத்தில் செயற்பட்ட சந்தர்ப்பங்களை ஒப்பிடுகையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களை பிரித்து கையேற்றிருந்தார்கள் அவற்றில் சிறீதரன் செயற்பட்டவிதம் சுமந்திரனது செயற்பாடுகளை விட பலமடங்கு நிர்வாக ரீதியாக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
சுமந்திரன் தான் பொறுப்பெடுத்த பிரதேச ஒருங்கிணைப்பு குழுப்பிரதேசங்களை தனக்கு உட்கட்சி ஆதரவுகளை பெருக்குவதற்காக சில பிரதிநிதிகளைத் தான் தெரிவு செய்து அவர்களிடம் வழங்கி செயற்பட அனுமதித்திருந்தார். அவை அனைத்தினதும் செயற்பாடுகள் பாரிய விமர்சனங்களைத் தோற்றியிருந்தன. ஆனோல்ட் தொடக்கம் சயந்தன் சுகிர்தன் வரைக்கும் விம்பத்தலைவரானார்கள். இவைகள் கட்சியின் எவ்வித அங்கீகரிப்பும் இன்றி வழங்கப்பட்ட செயலணிக்குழுவாக இருந்தன.
இவை தொடர்பில் பெரியதொரு பட்டியலிட்ட ஆய்வுக்கட்டுரையை எழுத முடியும் இருப்பினும் இப் பண்புப் பொருத்தம் ஒப்பீட்டளவில் சிறீதரனுக்கே சிறப்பாக இருக்கின்றது.
தொடர்புத்திறன்
ஒரு கட்சியின் சிறப்பான தலைவருக்கு பொதுப்பேச்சு, ஊடகத்திறன் மற்றும் கட்சி உறுப்பினர்களை ஊக்குவிப்பதுடன் பொதுமக்களுடன் நெருக்கமான இயல்புநிலைத் தொடர்புகளை பேணுதல் அவசியமானது. இதனை இலங்கையில் மிகச் சிறப்பான மேற்கொண்டுவரும் ஒரே ஒரு கட்டி தேசிய மக்கள் சக்தி அல்லது ஜேவிபி என்று அழைக்கப்படும் கட்சிமாத்திரமே ஆகும்.
மற்றபடி எந்தவொரு கட்சியும் இதனை ஒப்பீட்டளவில் திறம்பட செய்யவில்லை. சுமந்திரனை தொழில்முறைரீதியான நாடாளுமன்ற உறுப்பினராக எங்கேயும் சாதாரண மக்கள் சந்திப்பதற்கு எவ்வித ஏற்பாடுகளும் இதுவரை இருக்கவில்லை. அவ்வாறு அணுகுவதென்றால் பல நந்திகளை சந்தித்துதான் தொடர்புகொள்ள முடியும்.
மாறாக சிறீதரனை எந்தொவொரு சாமானியனும் தொழிலமுறைரீதியாக நாடாளுமன்ற உறுப்பினராக அவரது அலுவலகத்திலோ குறைந்தபட்சம் கையடக்கத் தொலைபேசியிலேனும் தொடர்புகொள்ள முடியும். இதில் இருந்து தொடர்புதிறன் யாருக்கு உள்ளது என்பதை தீர்மானிக்கையில் சிறீதரனுக்கே பொருத்தமாகின்றது.
கவர்ச்சியுடைய சார்புத்தன்மை
மக்களை அரசியல் விடயங்களில் பங்கேற்க தூண்டி அணிதிரட்டி மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பவர் என்ற கவர்ச்சியை ஒரு தலைவர் நிலைநிறுத்திக்காட்டவேண்டும். தமிழ்மக்கள் பலராலும் ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த டாக்டர் ஜெயலத்ஜெயவர்த்தனவை இதற்கு உவமானமாக கொள்ளமுடியும்.
நாடாளுமன்றக் காலப்பகுதியில் இவ்விரு வேட்பாளர்களும் நாடாளுமன்றத்தில் பேசிய விடயங்ளை ஒப்பிட்டுப் பார்க்கையில் அதிகம் மக்களது விதம்விதமான பிரச்சினைகளை தொடர்புடைய தரப்புக்களிடம் இருந்து திரட்டி கான்சாட்டில் அறிக்கைப்படுத்தியிருப்பது சிறீதரனே.
சிறீதரனால் திரட்டி முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் வெவ்வெறு விதமான மட்டங்களில் மக்களிடம் இருந்து திரட்டப்பட்வைகளாக காணப்படுகின்றன. சுமந்திரனால் அறிக்கைப்படுத்தப்பட்டவைகள் சாதாரண வாக்களிக்கும் மக்களுடையவைகள் என்பன மிகச் சொற்பமானவையே. அவையும் ஒருசார்தளத்திலிருந்தே ஒவ்வொரு முறையும் திரட்டி முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் அர்த்தம் யாதேனின் மக்கள் தொடர்புகளுக்குள் வடிகட்டுதல்கள் இடம்பெறுகின்றன. இவ்விடயமும் ஒப்பீட்டளவில் சிறீதரனுக்கு பொருத்தமாகவே காணப்படுகின்றது.
ஒருமைப்பாடு மற்றும் நெறிமுறைகள்
ஒரு சிறந்த கட்சித் தலைவர் உயர்மட்ட நேர்மையையும் நெறிமுறை நடத்தையையும் வெளிப்படுத்துவதுடன் அரசியலில் நேர்மையாகவும் மற்றையவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமானவராகவும் இருத்தல் அவசியமானது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கடந்த வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருக்கும் தமிழரசுக் கட்சியின் ஒரு அணியினருக்கும் ஆட்சியின் இறுதிக்காலத்தில் வழக்குவரை சென்ற விடயங்களும் சிறப்பான உதாரணமாக அமையும்.
தமிழரசுக் கட்சியில் இருந்து தமிழ்தேசியக் கூட்டமைப்பாக வெல்லப்பட்டு ஆட்சிப்பீடமேறிய விக்னேஸ்வரனுக்கு குடைச்சல் கொடுத்து இன்று அவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக்கிய பெருமை சுமந்திரனையே சாரும். இதனை விட வேறு எந்த அனுபவத்தினையும் இதற்காக ஆராயவேண்டியதில்லை. இவ்விடயம் ஒப்பீட்டளவில் அல்ல ஒரு வகையிலும் சுமந்திரனுக்கு பொருத்தமற்றது.
கட்சி கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை கிஞ்சித்தும் அனுசரித்து ஒரு விடயங்களும் நடைபெறவில்லை அவ்வாறு நடைபெற்றிருந்தால் இவ்விடயத்திற்கு நீதிமன்ற வழக்கு அல்ல உட்கட்சி ஒழுக்காற்று விசாரணையே நடந்திருக்கவேண்டும்.
முடிவெடுக்கும் திறன்
ஒரு சிறந்த தலைவர் எவ்வித அழுத்த நிலையிலும் தகவல்கள் மற்றும் தரவுகளைக் பகுப்பாய்வு செய்து திறன்மிக்க நிபுணர்களுடன் கலந்துரையாடி சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுக்க வேண்டும். தலைவர் பதவிக்கு முன்னிற்கும் ஒருவர் ஜனரஞ்சகமானவராக இருக்கவேண்டும்.
அதற்கான திறனாய்வாக போட்டியிடும் இருவரும் ஏதேனும் சமதளத்தில் ஒன்றாக நிலைப்படுத்தப்பட்டதை ஆராய வேண்டும். கடந்த பொதுத் தேர்தல் விருப்பு வாக்குக்கள் இதற்கு மிகச்சிறந்ததொரு ஆய்வுச் சூழலாகும். அதிகூடிய விருப்பு வாக்குடையவர் கட்சிக்கு தலைவராவது தர்க்க ரீதியிலும் சூழ்நிலை அடிப்படையிலும் பொருத்தமானதொரு ஏற்புடைய நியாயமாகும்.
இவ்வாறான நிலையில் சுமந்திரன் கட்சியின் எதிர்காலம் என்ன என்பதையே சிந்திக்காது தனது தனிப்பட்ட கௌரவம் என்பதற்கு முன்னிலைகொடுத்து தலைவர் போட்டியில் தேர்தல்வரைக்கும் நகரும் முடிவெடுத்தமை ஒரு நல்ல கட்சித் தலைவருக்கான முடிவெடுக்கும் திறனாக கருதமுடியாது.
வேறு விதமான சூழலில் இன்றைய ஜனாதிபதியாகிய ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டது மக்கள் ஆணையில் அல்ல என்பதால் அவர் மக்கள் ஆணையற்ற ஜனாதிபதி என அடித்துச்சொல்லும் சட்டவாதியான சுமந்திரன் எப்படி அதிகூடிய விருப்புவாக்குகளை சக போட்டியாளருடன் தேர்தலில் பெற்றுக்கொள்ள முடியாது கட்சியின் தலைவர் ஆவது அதுவும் மக்கள் ஆணையற்ற தெரிவாக அமையாதா?
இவ்விடயத்தில் சுமந்திரன் கட்சிக்காக நல்ல முடிவெடுக்கும் திறன் அற்றவர் தனக்கான நல்ல முடிவை கட்சியில் இருந்து எடுப்பவர் என்பதால் பொருத்தமற்றவர் ஆகின்றார்.
யாழ்மாநகர சபை முதல்வராக இருந்த ஆனோல்ட் ஆட்சி இழந்து மணிவண்ணன் ஆட்சிப்பீடம் ஏறியதும் அதற்காக தமிழரசுக் கட்சிக்குள் எடுக்கப்பட்ட முடிவும் எவ்வகையானது என்பது உட்கட்சி அன்பர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள் உவ்விடயத்தினை விலாவாரியாக இங்கே எழுதுவது சற்று பருமனான விடயம். இருந்தும் அங்கே எடுக்கப்பட்ட முடிவெடுக்கும் திறன் நேர்மையானதாக கட்சிக்குரியதாக அன்றி நேர்மறையானதான அமைந்ததை மீண்டும் மறுமுறை ஆனோல்ட் தெரிவுசெய்யப்பட்டதன் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் புத்திசாலித்தனம்
சிக்கலான அரசியல் சூழ்நிலைகளை திறம்பட கையாளத்தக்க அரசியல் புத்திசாலித்தனம் ஒரு சிறந்த கட்சித் தலைவருக்கு இருக்க வேண்டும். தமிழரசுக் கட்சியில் முதல்தடவை தேசியப்பட்டியலில் உள்வந்துவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏன் மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்ற யதார்தத்தினை உணர்வோடு புரிந்து வென்றுவிட்டு கட்சியின் அடிப்படை நிலையை சவாலுக்கு உட்படுத்தி கருத்துக்களை வெளியிட்டு பல அழுத்தங்களையும் புலம்பெயர் தேசத்தில் இடம்பெற்ற சந்திப்புக்களில் சலசலப்பையும் விரட்டுகைகளையும் தாக்குதல்களையும் பெற்றுக்கொண்ட அனுபவம் சுமந்திரனுக்கு மாத்திரமே உண்டு.இது ஒரு அரசியல் புத்திசாலித்தனமின்மைக்கு மிகவும் சிறப்பானதெரு உதாரணமாகும்.
உள்ளடக்க குழுக்களை உருவாக்குதல்
ஒரு தலைவரால் உள்ளடக்க குழுக்கனை உருவாக்குதல் என்பது சிறப்பாக வெளிப்பட்டால் அவருக்கான ஆதரவுத்தளம் அதிகரிக்கும். இவ்விடயத்தில் சுமந்திரன் தோற்றவராகவே காணப்படுகின்றார் கட்சி அதிகாரங்களை கபளீகரம் செய்வதற்குரிய உள்ளக அணிகளை உருவாக்கி அழுத்தங்களை பிரயோகித்து பல விடயங்களை மேற்கொண்டுள்ளார்.
கட்சியின் ஏகோபித்த நிலைப்பாட்டில் அம்பாறை மாவட்ட தேசியப்பட்டியல் ஆசனம் கலையரசனுக்கு வழங்கப்படவில்லை. மாவை சேனாதிராசா தேர்தலில் தோற்றார் அவருக்கு வழங்க கட்சி ஏகோபித்த தீரமானம் மேற்கொண்டும் உள்ளக குழுக்களின் சில செயற்பாடுகளின் ஊடாகவும் நிர்வாக செயற்பாடுகள் மற்றும் காலஅவகாசம் ஆகியவற்றை சிறப்பாக பிரயோகித்து அதே தேர்தலில் தோற்ற கலையரசனை நாடாளுமன்ற உறுப்பினராக்கி தமிழரசுக் கட்சித் தலைவர் தோற்கடிக்கப்பட்டார்.
உள்ளக குழுக்களை கட்சி வளர்ச்சிக்கு உருவாக்கவேண்டுமே அன்றி சொந்த தீர்மானங்களுக்காக அல்ல என்பதை இவ்விடயம் புடம்போட்டு காட்டுகின்றது.
தழுவல் மற்றும் நெகிழ்ச்சி
அரசியல் மாறும் தன்மை உடையது. எதிர்பாராத சவால்களைக் கொண்டது ஒரு தலைவர் தன்னைத் தகவமைத்துக்கொள்ளக்கூடியவராக பின்னடைவுகளில் இருந்து பாடம் கற்கக்கூடியவராக விமர்சனங்கள் மற்றும் சிக்கல்களை ஏற்று திருத்திக்கொள்ளக்கூடியவராக இருத்தல் அவசியமானது.
சரத் பொன்சேகா தன்னை கொல்ல முயன்ற புலி உறுப்பினரை மன்னிக்கின்றார், மைத்திரிபால சிறிசேன தன்னைக்கொல்ல வந்த புலி உறுப்பினரை மன்னிக்கின்றார் மேலும் ஒரு படி முன்சென்று ஈழமக்கள் ஜனநாயக கட்சிச் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தன்னைக் கொல்லவந்த புலி உறுப்பினரை மன்னிக்கின்றார். ஆனால் முன்னாள் போராளிகள் தன்னைக் கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கினை இன்னமும் சுமந்திரன் தொடர்கின்றார்.
இவ் வழக்குகள் அனைத்தும் அரசதரப்பால் தொடரப்பட்டவைகள். இவற்றில் இருந்து விடுபடாது பெற்ற அனுபவங்களை சீர்செய்யாது தனி மனித அரசியல் அங்கீகாரத்தை வலுப்படுத்தமுடியாத சுமந்திரன் எவ்வகையில் கட்சிக்கு தலைவராக முயலலாம்.
பேச்சுவார்த்தையும் இராஜதந்திரமும்
இராஜதந்திர திறன்கள் கட்சியின் நோக்கங்களை அடைவதற்கு மிகவும் இன்றியமையாதவைகள் ஆகும் இதனை ஒரு சிறப்பான தலைவர் தரமாக முன்னெடுக்கவேண்டும். கட்சி தனது மட்டத்திலேயே இராஜ தந்திர அணுகுமுறைகளை நிலைநிறுத்த வேண்டும். இங்கே மாறாக கட்சியை அடைவதை (கட்சித் தலைவராக) நோக்காக கொண்டு உட்கட்சி இராஜ தந்திரங்கள் பிரயோகிக்கப்படுவதில் சுமந்திரன் முன்னிலை வகிக்கின்றார்.
இந்த ஆற்றல் உண்மையில் போற்றத்தக்கது. இது கட்சியை வலுப்படுத்தவோ வளர்க்கவோ பாவிக்கப்படவில்லை மாறாக கட்சியின் உடைவுக்கு காரணமாக அமைவதால் சுமந்திரன் ஒப்பீட்டளவில் சிறீதரனைவிடவும் இவ்விடயத்தில் வெறுக்கப்படுகின்றார்.
கொள்கைச் சிக்கல்கள் பற்றிய புரிதல்
இவ்விடயம் தொடர்பில் இச்சம்பவத்தினை நோக்கினாலே புரியும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலிற்கு முன்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிப் பிரிவுகள். இணைந்த வடக்கு கிழக்கு என வாய்க்கு வாய் முழங்கும் நாங்கள் எப்படி ஒரு இணைந்து உருவாக்கிய கட்சிக்குழுமத்தினை உடைத்துவிடுவது.
இதில் இருந்து கொள்கைச் சிக்கல்கள் பற்றிய புரிதல் சற்றும் அற்றவதாரக சுமந்திரன் எதேச்சாதிகாரமாக செயற்பட்டது உறுதியாகின்றது. இவ்வகையில் இப்பண்பும் இவருக்கு பொருத்தமற்றதாகின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தெரிவாகும் கட்சித் தலைவருக்கு இருக்கவேண்டிய பண்புகள் தொடர்பில் ஒவ்வொரு வாக்களிக்கும் பிரதிநிதியும் தனக்கு வாக்களிக்கும் யோக்கியத்தை வழங்கிய தான் பிரதிநிதித்து நிற்கும் பொதுமக்களாகிய வாக்காளர்களுக்காகவேனும் (வாக்களிக்கும் யோக்கியம் தலைவர் வேட்பாளர்களால் வழங்கப்பட்டதையும் அதற்கு நன்றிக்கடனாக வாக்களிக்கவேண்டும் என கருதாது) உண்மைக்காக செயற்படவேண்டும் என்ற நிலை இருக்கவேண்டும் என இப் பொருத்தப்பத்திரம் முடிவுகாண்கிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sheron அவரால் எழுதப்பட்டு, 17 January, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.