இலங்கையில் பொது மக்கள் விபரீத முடிவுகளை எடுக்கலாம்! மீட்பரால் ஏற்பட்ட கதி (Video)
உலகளாவிய ரீதியில் தற்போதும் இலங்கை ஒரு பேசுபொருளாகவே உள்ளது. இதுவரையில் எங்குமில்லாதவாறு விலை அதிகரிப்பு, பொருட்கள் பற்றாக்குறை, மின் துண்டிப்பு, எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பு என தினம் தினம் இலங்கை மக்கள் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
பொது இடங்களிலும், அரசியல் மேடைகளில் அரசுக்கு எதிராக கருத்துக்களும் பிரச்சாரங்களும் வலுத்து வருகின்றன. குறிப்பாக சொல்லப் போனால், இந்த அரசாங்கம் பதவியேற்றதன் பின்னரே இவ்வாறான அவல நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டதாக பொதுமக்கள் பகிரங்கமாகவே அறிவித்து வருவதோடு எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய குண்டுத் தாக்குதலின் பின்னர் அப்போதிருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது.
அதன் பின்னர் இலங்கையை ஒரு மீட்பரால்தான் காப்பாற்ற முடியும் என்ற ஒரு விம்பம் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியில் பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆட்சிக்கு வந்ததே இந்த அரசாங்கம்.
எனினும், காலப் போக்கில் மீட்பர் என்ற மனநிலையில் இருந்து மக்கள் மாறி ஒரு அரக்கர் அல்லது சர்வாதிகாரி என்ற மன நிலைக்கு வந்துவிட்டனர் எனலாம்.
இன்று நாடளாவிய ரீதியில் அதிகரிக்கப்பட்டுள்ள விலைகள் காரணமாக மிகவும் வசதிப்படைத்தவர்களே அல்லலுறும் நிலையில், அடிமட்ட மக்களின் நிலை என்வென்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அன்றாடம் அடிமட்ட மக்கள் படும் துன்பங்களை ஊடகங்கள் வாயிலாக நாங்கள் பார்த்து வருகின்றோம்.
அந்த வகையில், கடந்த பல வருடங்களாக இலங்கையில் மலையக மக்கள் என்போர் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அப்பாவி மக்களாக அடையாளப்படுத்தப்பட்டு வந்தனர்.
உண்மையும் அதுதான், ஒரு சிலர் அதில் விதி விலக்காக இருக்கலாம். ஆனால் 75 வீதமானோர் வறுமை நிலையை சமாளிக்க முடியாமல் திண்டாட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களாகவே இருக்கின்றனர்.
குறிப்பாக நாம் அண்மையில் அறிந்த ஒரு விடயம், ஒரு தந்தை தனது நான்கு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அவல நிலையை நாங்கள் கண்கூடாக பார்க்க நேர்ந்தது. மலையக மக்களைப் பொறுத்தமட்டில் இந்த நாட்டில் தனித்துவம் மிக்கவர்களாக விளங்குகின்றனர்.
அதேசமயம் இவர்கள் மத்தியில் பேசப்படும் மற்றும் பேசப்படாத மறைமுக பிரச்சினைகள் அநேகம் உள்ளன. இந்த பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்படவில்லை மற்றும் தேசிய பிரச்சினைகளுக்குள் உள்வாங்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் காலம் காலமாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, தீர்க்கவேண்டிய அதிகார நிலையில் இருப்பவர்கள் இதனை கண்டுகொள்வதில்லை என்பதே மிகப்பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகின்றது.
காலமாற்றம் மிக வேகமாக நடந்து வருகின்ற போதிலும் மலையக மக்களின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இலங்கை பிரஜைகள் என்ற ஒரு உரிமை உள்ளபோதும், மாற்றாந்தாய் மனப்பான்மையில் மலையகத்தவர் பார்க்கப்படும் அந்த ஒரு அவல நிலை இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
உண்மையில் காலத்திற்கு காலம் ஆட்சி மாறியபோதும், வாழ்க்கைமுறை, விலைவாசி என அனைத்தும் மாறிய போதும் இதுவரையில் மலையகம் மட்டுமே அவ்வாறே இன்றும் மாற்றம் காணாமல் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவற்றுள் பிரதானமாக மலையகத்தவரின் சம்பள பிரச்சினை.
தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபா என்ற சம்பள கோரிக்கை கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட ஒன்று. அப்போதுள்ள காலகட்டத்திலேயே மலையகத்தவருக்கு ஆயிரம் ரூபா சம்பள தேவை இருந்த நிலையில், ஆறு வருடங்கள் கடந்த பிறகும் மலையகத்தவரின் தேவைகள் ஆயிரம் ரூபாவுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்று நினைப்பதில் எத்தனை நியாயம் உண்டு.
அவர்களின் தேவைகள், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கான பணம், வைத்திய செலவுகள், போக்குவரத்து செலவுகள் என கணக்கிடும் போது அவர்களின் தேவையை ஆயிரத்திற்குள் உள்ளடக்குவது சம காலத்தில் பொறுத்தமற்ற ஒன்று.
அதுவும் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கும் இந்த காலகட்டத்தில் ஆயிரம் என்பது எரிவாயு கொள்கலனைப் பெற்றுக்கொள்ளவே போதாது என்பதே உண்மை.
விலைவாசி உச்சத்தை எட்டியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள், தனி ஒரு பெற்றோராக தோட்டத்தில் வேலை செய்து பிள்ளைகளை வளர்த்து வரும் இரு குடும்பங்களை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டோம்.
குறிப்பாக மலையகத்தைப் பொறுத்த மட்டில், மாதம் 10ஆம் திகதி அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். அதே போல மாதம் 25ஆம் திகதி 5000 ரூபாய் முற்கொடுப்பணவு ஒன்று வழங்கப்படும்.
இதனை வைத்தே முழு மாதத்திற்குமான உணவுத் தேவை, பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை, வைத்திய செலவுகள், மின்கட்டணம் மற்றும் இதர செலவுகளை பார்க்க வேண்டிய தேவை உள்ளது.
குறிப்பாக மாதாமாதம் சம்பளம் கிடைத்தவுடன் அதனைக் கொண்டு வீட்டின் அந்த மாதத்திற்கான செலவுகளை திட்டமிட்டு செலவழிப்பது மலையகத்தவரிடையே இருக்கும் பிரதான வழக்கம்.
ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை ஒரே தடவையில் கொள்வனவு செய்து வைத்துவிடுவர். ஆனால், அவை மாத இறுதிக்குள் முடிவடைந்து விட்டதும் உணவுக்கென்று ஒன்றும் இல்லாமல் திண்டாடும் குடும்பங்களும் உண்டு.
அதேசமயம், இங்கிருக்கும் கடைகளில் கடனுக்கு உணவுப் பொருட்களை வாங்கி விட்டு மாதாமாதம் பணம் கொடுப்பவர்களும் உண்டு. ஆனால் கடன் தொகை மிக அதிகரித்துக் கொண்டே செல்லும்.
அத்துடன், முதல் மாதத்தில் உணவுக்காக கடன் பெற்று அடுத்த மாத சம்பளத்தில் அதனைக் கொடுத்து விட்டு மீண்டும் கடன் வாங்க வேண்டிய இக்கட்டான நிலையும் மக்கள் உள்ளனர்.
இப்படியான இரு குடும்பங்களை நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஒரு குடும்பத்தில் தந்தை மாத்திரம் வேலை செய்கிறார், அவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.
ஒரு மகள் சாதாரணதர மாணவி, தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், எட்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர். இந்த குடும்பத்தில் இம்மாதத்தின் மொத்த வருமானம் 6560 ரூபா. பிற வருமானங்கள் எதுவும் கிடையாது. ஆனால் இதனைக் கொண்டே இம்மாதத்திற்கான அனைத்து செலவுகளையும் அவர்கள் கவனித்தாகவேண்டும்.
சாதாரணமாக ஒரு எரிவாயு கொள்கலனை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் இந்த குடும்பம் தனது மொத்த வருமானத்தில் பாதியை அதற்கான செலவழிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். நாங்கள் பார்த்த வரையில், ஒரு நேர உணவு மாத்திரம் உண்டு, அல்லது வெறும் பருப்பு சோறு மாத்திரம் உண்டு வாழ்பவர்களாகவே உள்ளனர்.
இதன்காரணமாக பிள்ளைகளை மேலதிக வகுப்புகளிற்கோ, பிள்ளைகளின் ஏனைய தேவைகளையோ கவனிப்பதற்கு பணம் இல்லை என்பதே உண்மை. மேலும், தற்போதிருக்கும் விலைவாசி அதிகரிப்பிற்கு இந்த குடும்பம் ஈடு கொடுப்பதென்றால் மாதத்தில் முக்கால்வாசி நாட்கள் பட்டினியாக இருக்கவேண்டிய அவல நிலையே ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், நாங்கள் மற்றுமொரு மூன்று பிள்ளைகளைக் கொண்டு குடும்பம் ஒன்றை ஆய்வுக்காக எடுத்தபோது, அந்த குடும்பத்தில் தாய் ஒருவர் மாத்திரம் தோட்டத்தில் பணி புரிபவர், தந்தை அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைக்கு செல்பவர். அந்த தாயின் இம்மாதத்திற்கான மொத்த வருமானம் 8760 ரூபாய். அந்த குடும்பத்தின் மொத்த வருமானம் 15,000 ரூபாவுக்குள்.
இந்த குடும்பத்தில் மூன்று சிறார்கள் கல்வி பயிலும் நிலையில். அவர்களின் கல்வித் தேவைக்காக மற்றும் போக்குவரத்திற்காக மாத்திரம் பெரும்பாலான பணத்தை செலவழிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் பிள்ளைகளுக்கான பாடசாலைக்கு கொடுத்து அனுப்பும் உணவுக்கே இங்கு வழியில்லை என்பதே உண்மை.
இந்த நிலை இப்படியே தொடருமாயின் மீட்க வந்த மீட்பரைக் காரணமாகக் கொண்டே இலங்கையில் தற்கொலைகள் அதிகரிக்கலாம்.