இலங்கையில் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலர் குருதி உறைதல் நோயால் பாதிப்பு! விசாரணைகள் தீவிரம்
இலங்கையில் கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களில் 4 - 6 பேர் குருதி உறைதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இவர்களுக்கு ஏற்பட்டுள்ள குருதி உறைதலுக்கு கோவிட் தடுப்பூசி காரணமா என விசாரணைகளை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்."
கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு குருதி உறைதல் ஏற்பட்டுள்ளதாக சில நாடுகள் தெரிவித்துள்ளன. எனினும் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளமை குருதி உறைதலில் நேரடி தாக்கம் செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள எந்தவொரு அரச வைத்தியசாலைக்கும் கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்ட நபர்கள் 3 நாட்களின் பின்னர் அல்லது 3 வாரங்களுக்குள் எந்த நோய்க்காக சிகிச்சை பெறுவதற்கு வைத்தியசாலைக்கு வருகை தந்தாலும் குறித்த நபர் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் விசேட சுற்று நிரூபம் வெளியிடப்பட்டது.
இதற்காக 24 மணித்தியாலமும் இயங்குகின்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர்கள் இருவர் இதற்காக பிரத்தியேகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வைத்தியசாலைக்கு வந்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் குருதி உறைதல் நோயுடன் தொடர்புடைய 4 முதல் 6 பேர் உள்ளடங்குகின்றனர். இவர்களில் டெங்கு நோய்க்கும் உள்ளாகியுள்ளார்.
அத்தோடு இது தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்களால் தொடர்ந்தும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனினும் தடுப்பூசி ஏற்றிக் கொண்டதால் தான் குருதி உறைதல் ஏற்பட்டுள்ளது என்பதற்கான காரணிகள் இனங்காணப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் தடுப்பூசியை பெற்று 4 வாரங்களின் பின்னர் குறித்த நால்வருக்கும் இவ்வாறு குருதி உறைதல் நோய் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் பரிசோதனைகள் இடம்பெறுவதால், தடுப்பூசி ஏற்றிக் கொண்டதால் தான் குருதி உறைதல் நோய் ஏற்பட்டுள்ளது என்று கூற முடியாது.
எவ்வாறாயினும், வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு கூட இவ்வாறு குருதி உறைதல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.