இலங்கை முழுவதும் மின் தடை ஏன் ஏற்பட்டது : உண்மையை அறிவியுங்கள் - சபையில் சஜித் கோரிக்கை
நாட்டில் நேற்று ஏற்பட்ட மின் தடைக்கு உண்மையான காரணம் என்ன? ஒரு மின் வழங்கியில் ஏற்பட்ட கோளாறால் முழு நாட்டுக்கும் எவ்வாறு மின் தடை ஏற்பட்டது என்பதை மக்களுக்கு அறியத்தர வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் இன்று(10) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் நேற்று மின் தடை ஏற்பட்டது. இந்தச் செயற்பாடானது மிகவும் பாரதூரமான ஒன்று. இந்த மின் தடை காரணமாக நீர் விநியோகத் தடையும் ஏற்பட்டது. வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
முழு நாட்டுக்கும் எவ்வாறு மின் தடை ஏற்பட்டது
இவ்வாறு பல சம்பவங்கள் நேற்று இடம்பெற்றன. இந்த விடயம் குறித்து மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதற்காக இந்த விடயத்தை நான் கூறவில்லை.
நேற்று இந்த மின் தடை ஏற்பட்டமைக்கான உண்மையான காரணத்தை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த விடயத்தில் பக்கச்சார்பாக நடந்துகொள்வதைவிடுத்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
ஆகவே, இந்த மின் தடைக்கு என்ன காரணம்? ஒரு மின் வழங்கியில் ஏற்பட்ட கோளாறால் முழு நாட்டுக்கும் எவ்வாறு மின் தடை ஏற்பட்டது என்பதை எமக்கு அறியத்தர வேண்டும்.
அதன்படி நாட்டில் நேற்று நிகழ்ந்த மின் தடையால் ஏற்பட்ட செலவுகள், வைத்தியசாலைகளில் ஏற்பட்ட மின் தடையால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்த முழு அறிக்கையையும் வெளிப்படுத்த வேண்டும். சபாநாயகரின் அனுமதியுடன் இந்தப் பிரேரனையை முன்வைக்கின்றேன் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |