இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் திடீரென மிகப் பெரிய மாற்றமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மே ஒன்பதாம் திகதி வன்முறை
கடந்த மே ஒன்பதாம் திகதி நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்ததுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், தீயும் வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பொது மக்கள் மத்தியில் வருவதை பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தவிர்த்து வந்தனர்.
ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்
இந்த நிலையில் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகளும் நீக்கப்பட்டுள்ளன.
நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் சந்தர்ப்பத்தில் நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்களின் கைபேசி இலக்கங்கள் மற்றும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள அவர்களது வசிப்பிடங்களின் முகவரிகள் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.