2020ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டியில் யாழ். மாவட்ட செயலகம் முதலிடம்
அரச துறை நிறுவனங்களுக்கான வினைத்திறனான சேவையை மதிப்பிடும் பொருட்டு தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் 2018/2019ம் ஆண்டினை தழுவி நடாத்தப்பட்ட 2020ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ். மாவட்ட செயலகம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
அரச துறையில் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பங்குகொண்ட 14 பிரதேச செயலகங்களும் வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் முதலாம் இடத்தினையும் யாழ்ப்பாணம், தென்மராட்சி, பருத்தித்துறை பிரதேச செயலகங்கள் இரண்டாம் இடத்தினையும் சண்டிலிப்பாய், கோப்பாய், கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.
உடுவில், காரைநகர், சங்கானை, ஊர்காவற்றுறை ,மற்றும் வேலணை பிரதேச செயலகங்கள் சிறப்பு மெச்சுரை விருதினையும் நெடுந்தீவு பிரதேச செயலகம் மெச்சுரை விருதினையும் பெற்றுள்ளது.
முதலிடம் பெற்றமை தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்,
யாழ். மாவட்ட செயலகம் தேசிய ரீதியாக மாவட்ட தரப்படுத்தலில் முதலிடம் பெற்றிருப்பதுடன் பங்கு பற்றிய 14 பிரதேச செயலகங்களும் பொதுமக்கள் சேவை வழங்கலில் சிறந்த அங்கீகாரத்திற்கான அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளமைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.
அதேவேளை இப் போட்டித் தொடரில் கடந்த 2016 ஆம் ஆண்டில் 3ம் இடத்தையும்
2018 ஆம் ஆண்டில் 2ம் இடத்தையும் பெற்று அரச அலுவலகங்களுக்கு முன்மாதிரியான
தனித்துவமான மாவட்டமாக யாழ். மாவட்டம் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.