சம்பிக்கவிற்கு உயிருக்கு ஆபத்தான நோய் இல்லை! - நீதிமன்றில் அறிக்கை சமர்பிப்பு
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் உடல் நிலை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்த கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி, முன்னாள் அமைச்சருக்கு உயிருக்கு ஆபத்தான நோய் இல்லை எனவும் அவர் நீதிமன்றில் முன்னிலையாக தகுதியானவர் என்றும் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்புடைய விசாரணைத் திகதியின் போது தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்பிக்க ரணவக்கவின் உடல்நிலையை பரிசோதித்த பின்னரே, கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்க, கடந்த நீதிமன்ற விசாரணை திகதியின் போது முன்னிலையாகவில்லை. அவரின் சார்பில் அவரது சட்டத்தரணிகளே முன்னிலையாகினர்.
சம்பிக்க ரணவக்க தொடர்பான பெரும்பாலான ஆய்வுகள் சாதாரணமாக இருப்பதால், நோயாளியை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றலாம் என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மேற்கொள்ளப்பட்ட பத்து மருத்துவ பரிசோதனைகளை ஆராய்ந்ததன் பின்னரே இந்த கருத்தை வெளியிடுவதாக பிரதம சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்ததுடன், எவரும் எந்த நேரத்திலும் நோய்வாய்ப்படக்கூடும் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, ராஜகிரிய விபத்து தொடர்பான வழக்கின் மேலதிக விசாரணையை பெப்ரவரி 18ம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தீர்மானித்தார்.
அத்துடன் வழக்கின் ஐந்து அரசுத் தரப்பு சாட்சிகளும் அடுத்த விசாரணைத் திகதியில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தலும் அனுப்பப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க, அவரது சாரதி துசித் திலும் குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி (OIC) சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக, பொய்யான சாட்சியங்களை சமர்ப்பித்தமை உட்பட்ட 16 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்கவை சட்டரீதியான தண்டனையிலிருந்து பாதுகாப்பதற்காக சாட்சியங்களை மறைக்க சதி செய்ததாக மற்றொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்கவை சட்டரீதியான தண்டனையிலிருந்து பாதுகாப்பதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றில் பொய்யான அறிக்கையை சமர்ப்பித்த குற்றச்சாட்டின் பேரில் ஏ.எஸ்.பி சுதத் அஸ்மடல மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி சந்தீப் சம்பத் என்ற இளைஞருக்கு பலத்த காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்கவுக்கு எதிராக முதலாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
