இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அதிக நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிப்பு
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நான்கு இலட்சம் கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2022ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2022ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2022ம் ஆண்டுக்கான மொத்த திருத்தப்பட்ட ஒதுக்கீடு 4,672 பில்லியன் ரூபாவாகும்.
அரசாங்கத்தின் மீள்செலவு 2,249 பில்லியன் ரூபா
இதன்படி, வரலாற்றில் முதல் தடவையாக இந்த நாட்டின் அரச செலவீனத்தில் நான்கு இலட்சம் கோடி ரூபாவை மீறும் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாளை சமர்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டுச் சட்டமூலங்களின்படி, அரசாங்கத்தின் மீள்செலவு 2,249 பில்லியன் ரூபாவாகும், வட்டிக் கொடுப்பனவுகள் தவிர்ந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 2022ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த மூலதனச் செலவு 1,809 பில்லியன் ரூபாவாக இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி காட்டப்பட்டுள்ளது.
நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசாங்கத்தின் அந்த வருடத்திற்கான வட்டிச் செலவு 1,334 பில்லியன் ரூபாவாகும். ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களினால் 2022ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 20 வீதம் அதிகரித்துள்ளதாக publicfinance.lk இணையத்தளம் தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் மொத்த செலவினம் 3,899 பில்லியன் ரூபாவாகும்.
773 பில்லியன் ரூபா மேலதிக தொகை சேர்ப்பு
இதன்படி, 2022ம் ஆண்டுக்காக நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில், அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு மேலாக 773 பில்லியன் ரூபா மேலதிக தொகை சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திருத்தப்பட்ட ஒதுக்கீட்டு மசோதா, 2022ல் அங்கீகரிக்கப்பட்ட பாதீட்டு பற்றாக்குறையை அடைவதற்கு, 2021 உடன் ஒப்பிடும்போது, மாநில வருவாய் 107 வீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
2022ம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்படி, அரச வருமானம் மற்றும் அரச செலவினங்களை ஒப்பிடுகையில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 1,638 பில்லியன் ரூபாவாகவும், புதிய கணக்கீடுகளின்படி, அரச செலவு மற்றும் அரச வருமானத்தை ஒப்பிடுகையில் 2,261 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதன்படி, 2022ம் ஆண்டில் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வருமான வரவு செலவுத் திட்ட இலக்குகளை எட்டினாலும், அது அந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட இடைவெளியான 2,412 பில்லியன் ரூபாவை விடக் குறைவாகும் என அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.