நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் - சுரங்கங்களில் சிக்கியவர்களை மீட்க போராட்டம்
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திபெத்தின் பேரழிவுப் பகுதிக்கு செல்லும் பிரதான பாதையை சீனா மீண்டும் திறந்துள்ளது.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு காரணமாக உருவான வெள்ளப்பெருக்கில் இதுவரை 1,114 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 4,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
தீவிரப்படுத்தப்படும் மீட்பு நடவடிக்கை
எனினும், நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதைகளுக்குள் சிக்கியுள்ள பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் மீட்புக் குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
சுரங்கங்களுக்குள் தேவையான காற்று, உணவு மற்றும் நீர் வசதிகள் இருக்கும் என்பதால் அவர்கள் உயிருடன் மீட்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு மீட்புக் குழுக்கள் இந்த அபாயகரமான மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
திபெத் பேரழிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள்
இதனிடையே, எல்லையோரப் பகுதியான கிராங் கணவாய்க்கான பிரதான வீதியை சீனா திறந்துள்ளதைத் தொடர்ந்து, கனரக இயந்திரங்கள் மற்றும் உயிர்மீர்ப்பு சாதனங்களுடன் மீட்புக் படையினர் திபெத் பேரழிவுப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
திபெத் பகுதியில் மாத்திரம் 104 இந்தியர்கள், 49 நேபாளிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக சீன அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பேரழிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பேரழிவின் நினைவுகளினாலும் இழப்புகளினாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாக சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.