அதிர்ந்த கொழும்பு! - பல இடங்களில் அரசுக்கு எதிராக போராட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்றைய தினம் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்சார சபை, துறைமுக அதிகார சபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தன.
வத்தளை - கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்தமையை இரத்து செய்தல், அமெரிக்க நிறுவனத்துடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையின் உண்மைத் தன்மையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, நாட்டில் நிலவும் பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி இலங்கை துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு -11இல் அமைந்துள்ள இலங்கை துறைமுக சபையின் மூன்றாவது நுழைவாயில் அருகே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவை கண்டித்தும், 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுத்தருமாறு கோரி புகையிரத ஊழியர்களது தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டன.
கொழும்பு டெக்னிக்கல் சந்தியில் அமைந்துள்ள புகையிரத திணைக்களத்தின் பிரதான காரியாலயம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதேவேளை, இலங்கை தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களது தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.
2021-2023 ஆம் ஆண்டு காலப் பகுதிக்கான தங்களின் சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்தக் கோரி கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் வங்கியின் உள்ள தலைமைக் காரியாலயதிற்கு முன்பாக தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்பாட்டத்தை மேற்கொண்டன.