பிரித்தானிய பிரதமரின் அதிரடி நடவடிக்கைகள்
பிரித்தானியாவில் கோவிட் பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமுலில் இருந்த போது, பிரதமர் இல்லத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விதிமீறல்கள் குறித்த சர்ச்சைகள் வெளியான நிலையில், அரசின் உயர் அதிகாரிகள் நான்கு பேர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
இது, பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு பெரம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக அரசுத் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கோவிட் பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை கடை பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி வந்த சூழலில், மதுபான விருந்துகளில் சிலர் நடந்து கொண்ட விதத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்து, அந்த சம்பவங்களுக்காக பிரதமர் போரிஸ் ஜோன்சன் மன்னிப்பு கோரியிருந்தார்.
மேலும், பிரதமா் போரிஸ் ஜோன்சனின் தலைமை குறித்து கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில், உயர் அதிகாரிகள் 4 பேர் இராஜினாமா செய்திருப்பது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், தனது பதவிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில் முன்னாள் பிரெக்ஸிட் அமைச்சர் ஸ்டீவ் பார்க்லேவை புதிய தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார்.
முக்கிய ஊழியர்களின் பதவி விலகளுக்கு பின்னர் போரிஸ் ஜோன்சன் தனது பிரதமர் பதவியைக் காப்பாற்ற இன்னும் பல மாற்றங்களைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கேபினட் அலுவலக அமைச்சராக இருக்கும் பார்க்லே, அரசின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்னாள் செய்தி தொகுப்பாளர் குடோ ஹாரி, புதிய தகவல் தொடர்புத் தலைவராக இருப்பார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், அரசின் செயல்பாடுகள் குறித்த பிரச்சனைகள் சரி செய்யப்பட வேண்டும் என்பதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.