மட்டக்களப்பில் மறு அறிவித்தல் வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார அதிகாரிகள்
மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவரையும், பிராந்திய பணிப்பாளர் மற்றும் ஜனாதிபதியையும் தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தல் விடுத்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரை பொது சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று முதல் மறு அறுவித்தல் வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக மாவட்ட பொது சுகாதார சங்கத்தலைவர் சி.சிவகாந்தன் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றையடுத்து ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள ஒருவரை அவரது வீட்டில் நேற்று முன்தினம் பொது சுகாதார பரிசோதகர்கள் தனிமைப்படுத்தி அந்த வீட்டின் முன்னால் அறிவித்தல் ஒட்டியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளர் பொது சுகாதார உத்தியோகத்தருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி, பிராந்திய சுகாதார பணிப்பாளர், பொது சுகாதார உத்தியோகத்தர் ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என தெரியவருகிறது.
இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் குறித்த நபருக்கு எதிராக பொது சுகாதார உத்தியோகத்தர் முறைப்பாடு செய்துள்ளார்.
இருந்தபோதும் குறித்த நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், பொது சுகாதார அதிகாரிகள் தற்போது பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இவ்வாறான அச்சுறுத்தலால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்றிலிருந்து மாவட்டதிலுள்ள அனைத்து பொது சுகாதார உத்தியோகத்தர்களும் மறு அறிவித்தல் வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை பொது சுகாதார உத்தியோகத்தர் சங்கம் இன்றில் இருந்து பணிப்பகிஷ்கரிப்பில்
ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.