கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடலாம்! அரசாங்கம் எச்சரிக்கை
கோவிட் தொற்று காரணமாக வேறுநாடுகளில் ஏற்பட்டது போன்ற நிலைமை இங்கு ஏற்பட இடமளிக்க முடியாது என அமைச்சர் கொஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுமக்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படத் தவறினால் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர நேரிடலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மக்களை முடிந்தளவு அறிவூட்டி பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு கோர வேண்டும்.
பலமான பலநாடுகளுக்கு ஏற்பட்டது போன்ற நிலை ஏற்பட இடமளிக்க கூடாது. திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் பொதுமக்கள் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும். தவறினால் அதற்கும் மீள சட்ட திட்டங்களை கொண்டு வர நேரிடும்.
மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் முழு நாடும் பாதுகாக்கப்படும். 30 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சட்டங்கள் ஊடாக கட்டுப்பாடுகளை விதிக்காது பொதுமக்களிடம் விடுக்கும் கோரிக்கைகளுக்கு அவர்கள் செவிசாய்க்காவிட்டால் சட்டதிட்டங்களை கொண்டுவர நேரிடும்.அதற்கு நாம் பின்நிற்க மாட்டோம் என்றார்.
இதேவேளை, போதுமான அளவு அவசரி சிகிச்சை கட்டில்கள் உள்ளன. அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் குறைபாடு காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் செயற்படுவார்கள் என நம்பினோம். கடந்த வருடமும் புத்தாண்டை கொண்டாட முடியாமல் போனதால் இம்முறை இடமளிக்கப்பட்டது.
மக்கள் புத்திசாலித்தனமாக செயற்படுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. புத்தாண்டுக்கு முன்னர் கட்டுப்பாடுகளை விதித்திருந்தால் இதனை விட நிலைமையை கட்டுப்படுத்தியிருக்கலாம் என” அவர் மேலும் கூறியுள்ளார்.